"பழி போட்டு தப்பிப்பதற்கான நேரம் இதுவல்ல" அமித் ஷாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி!
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படும் என முன்கூட்டியே எச்சரிக்கை அனுப்பப்பட்டதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலி எண்ணிக்கை 250ஐ தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே கணிக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகள் இருந்த போதிலும் மக்களை சரியான நேரத்தில் காப்பாற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
நிலச்சரிவு குறித்து முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டதா? கேரள அரசு மீது சரிமாரி குற்றச்சாட்டுகளை சுமத்திய மத்திய அமைச்சர் அமித் ஷா, நிலச்சரிவு ஏற்படும், அதனால் மரணங்கள் நிகழலாம் என கேரளாவுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததாகவும் ஆனால், மக்களை சரியான நேரத்தில் வெளியேற்றவில்லை என தெரிவித்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "பழி போட்டு தப்பிப்பதற்கான நேரம் இதுவல்ல" என்றார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "பெரும் நிலச்சரிவு காரணமாக வயநாட்டில் மக்கள் சொல்லொணாத் துயரத்தில் சிக்கிக்கொண்டிருப்பதால் நான் இப்போது பழி போடும் விளையாட்டில் ஈடுபட விரும்பவில்லை.
ஆனால், உண்மை என்னவெனில், தற்போது பாதிக்கப்பட்ட பகுதியில் ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை. உண்மையில், செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை வந்தது. ஆனால், அதற்கு பல மணி நேரத்திற்கு முன்பே துயர சம்பவம் நடந்துவிட்டது.
கேரள முதலமைச்சர் சொன்ன முக்கிய தகவல்: பாதிக்கப்பட்ட பகுதிகளில் 115 மிமீ முதல் 204 மிமீ வரை மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தது. ஆனால், முதல் 24 மணி நேரத்தில், 200 மிமீ மழையும் அடுத்த 24 மணி நேரத்தில், 372 மிமீ மழையும் பெய்துள்ளது.
அதிர்ச்சியளிக்கும் வகையில் 48 மணி நேரத்தில் 572 மிமீ மழை பெய்துள்ளது. இது, கணித்ததை விட அதிகம். எனவே, இதுவே உண்மையாக இருப்பதால், சண்டையிடுவதற்கான நேரம் இதுவல்ல என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
பின்னர், மத்திய நீர் ஆணையமும் எச்சரிக்கை விடுத்தது. ஜூலை 23 முதல் 29 வரையிலான தேதிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதே தவிர, ஒரே நாளில் இப்படி நடக்கும் என எச்சரிக்கப்படவில்லை. இரண்டு நதிகளில் பெருக்கெடுத்தது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது உண்மையில்லை.
தேசிய பேரிடர் மீட்பு படை முன்கூட்டியே அனுப்பப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால், அதை நாங்கள் கேட்ட பிறகுதான் அனுப்பினார்கள்" என்றார்.