Watch Video: வாக்குப்பதிவு இயந்திரத்தை கொளுத்திய வாக்காளர் - மகாராஷ்டிராவில் பரபரப்பு!
வாக்காளர் ஒருவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (இ.வி.எம்.) திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
EVM Fire: இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார்? என்பது அனைவரின் மனதிலும் கேள்வியாக எழுந்துள்ளது. அந்த கேள்விக்கான பதில் மக்களவை தேர்தல் முடிவுகளின் மூலம் தெரிந்துவிடும். கடந்த 19ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மகாராஷ்டிரா:
ஏற்கனவே, இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நிறைவடைந்துள்ளது. முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக 88 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. மூன்றாவது கட்டமாக 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களில் ஒன்றாக கருதப்படும் மகாராஷ்டிராவில் பாராமதி, கோலாப்பூர் உள்பட 11 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. கோலாப்பூர் தொகுதியை பொறுத்தவரையில் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக கருதப்படுகிறது.
இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பாக மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் மகளும் மூன்று முறை எம்எல்ஏவுமான பிரணிதி ஷிண்டே களமிறங்கியுள்ளார். கோலாப்பூரில் பா.ஜ.க. சார்பாக ராம் சத்புதே போட்டியிட்டுள்ளார்.
வாக்குப்பதிவு இயந்திரத்தை கொளுத்திய வாக்காளர்:
கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள மாதா மக்களவை தொகுதியின் கீழ் வரும் மல்ஷிராஸ் சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார் சத்புதே. சோலாப்பூர் மக்களவைத் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு சுமூகமாகவே நடந்து கொண்டிருந்தது.
ஆனால், வாக்காளர் ஒருவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (இவிஎம்) திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நமக்கு கிடைத்த தகவலின்படி, சோலாப்பூர் மாவட்டம் சங்கோலா தாலுகா பாகல்வாடியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க ஒருவர் முயல்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தால், புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்படும் வரை வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. சம்பவத்தை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
View this post on Instagram
இந்தியா கூட்டணி:
கடந்த முறை போன்று இல்லாமல் இந்த முறை மகாராஷ்டிராவில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒருபுறம் வலுவான கூட்டணி அமைத்து இந்தியா கூட்டணி சார்பில் களம் காண்கிறது.
பாஜக, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மறுபுறம் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறது. கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 40க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றது.