வினேஷ் போகத், பஜ்ரங் புனியாவை களத்தில் இறக்கும் காங்கிரஸ்.. ராகுல் காந்தியின் மாஸ்டர் பிளான்!
வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளனர்.
ஹரியானாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளனர்.
களத்தில் இறங்கும் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா:
சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பாக இருவரும் களமிறக்கப்படுவார்கள் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஜூலானா தொகுதியில் வினேஷ் போகத்தும் பட்லி தொகுதியில் பஜ்ரங் புனியாவும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் அமைப்பு செயலாளராக உள்ள கே.சி.வேணுகோபாலை இரண்டு மல்யுத்த வீரர்களும் சந்திக்க உள்ளனர். பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டுவிட்டு இந்தியா திரும்பியதிலிருந்து, அவர் காங்கிரஸ் தலைவர்களுடனே காணப்படுகிறார்.
பாரிஸில் இருந்து வந்த வினேஷ் போகத்தை டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று நேரடியாக வரவேற்ற முதல் அரசியல் தலைவர் காங்கிரஸ் எம்பி தீபேந்தர் ஹூடா ஆவார்.
ராகுல் காந்தியின் மெகா பிளான்:
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அப்போதைய இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவரும் பாஜகவின் முக்கிய நிர்வாகியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போகட் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தினர். அதற்கு, தீபேந்தர் ஹூடா ஆதரவு தெரிவித்திருந்தார்.
முன்னதாக, ஹரியானா முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பூபேந்தர் சிங் ஹூடாவை வினேஷ் போகத் சந்தித்து பேசினார். கட்சியில் சேர யார் விரும்பினாலும் அனைவரையும் காங்கிரஸ் வரவேற்கிறது என அவர் கூறியிருந்தார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ மல்யுத்த எடை பிரிவில் இறுதி போட்டி வரை சென்று அசத்திய வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது 140 கோடி இந்தியர்களின் கனவை சுக்குநூறாக்கியது. உலகின் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி இறுதி போட்டி வரை சென்றபோதிலும், போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகளவு இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
வினேஷ் போகத்தை ஊக்கப்படுத்தும் விதமாக அவரை மாநிலங்களவைக்கு அனுப்ப வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும் ஹரியானா மாநில முன்னாள் முதலமைச்சருமான பூபிந்தர் சிங் ஹூடா கோரிக்கை விடுத்தார்.