(Source: ECI/ABP News/ABP Majha)
''எங்க ஊரு டாக்டர் அவரு..'' மருத்துவரின் சிகிச்சைக்கு ரூ.20 லட்சம் திரட்டிய கிராம மக்கள்!
கிராமத்து மக்களுக்காக ஓடி ஓடி உழைத்த மருத்துவருக்கு ஒரு தேவை என்றதும் அந்த கிராமமே கைகோர்த்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது
கொரோனா காலம் மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் புரட்டி போட்டுள்ளது. கொரோனா, மாஸ்க், ஊரடங்கு, சானிடைசர் என மக்கள் வாழ்வதற்கு பழகிவிட்டனர். அருகருகே நின்றுகொண்டு முகம் பாரத்து கைகுலுக்கி பேசுவதே கனவாகி வருகிறது. ஆனால் இந்த கொரோனா காலம் மனிதநேயத்தை தோலுரித்துக் காட்டுகிறது. இலவசமாக உணவு கொடுப்பதும், ஆட்டோவை ஆம்புலன்சாக பயன்படுத்துவதும் என ஆங்காங்கே நிஜ ஹீரோக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என அடையாளம் காட்டியுள்ளது இந்த கொரொனா. அந்த வகையில் ஒரு கிராமமே நாயர்களாக மாறியுள்ள சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
ஆந்திராவில் உள்ள கரஞ்சேடு கிராம மக்களுக்காக ஓடி ஓடி உழைத்த மருத்துவர்கள் பாஸ்கர் ராவ் மற்றும் அவரது மனைவி பாக்கியலட்சுமி. ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக இருக்கும் பாஸ்கரும், மருத்துவக் கல்லூரியில் பேராசியராக இருக்கும் பாக்கியலட்சுமியும் மருத்துவத்தை சேவையாக செய்து வருகின்றனர். குறிப்பாக கரஞ்சேடு கிராமத்தின் நாயகர்கள் இவர்கள். அந்த கிராம மக்களுக்காக நேரம், காலம் பார்க்காமல் உழைத்த இருவரும் கொரோனா காலத்திலும் ஓய்வு எடுக்கவில்லை. சிகிச்சை, விழிப்புணர்வு என பம்பரமாய் சுற்றியவர்களை கொரோனா தீண்டியது. இருவருமே கொரொனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் பாக்கியலட்சுமி கொரோனாவில் இருந்து மீண்டார். ஆனால் பாஸ்கருக்கு நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டது. உடனடியாக பாஸ்கர் விஜயவாடா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரை சோதித்த மருத்துவர்கள் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேல் சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் கூறிவிட்டனர்.
கஞ்சாவுக்கு அடிமையானதால் விபரீதம் : கடத்தப்பட்ட டிக்டாக் சிறுமிகள் திண்டுக்கல்லில் மீட்பு
நுரையீரல் அறுவை சிகிச்சைக்கு ரூ.2 கோடி வரை செலவாகும் என்பதால் பாக்கியலட்சுமி செய்வதறியாது இருந்துள்ளார். நண்பர்கள், உறவினர்கள், சமூக வலைதளங்கள் என உதவி கேட்டு பணத்தை சேர்த்து வந்துள்ளார். இந்த விவரம் கரஞ்சேடு கிராம மக்களுக்கும் எட்டியுள்ளது. தங்களுக்காக உழைத்த மருத்துவருக்கு ஒரு கஷ்டம் என்றதும் துயரப்பட்ட கிராம மக்கள் தங்களால் முடிந்த பணத்தை கிராமம் முழுவதும் வசூலித்தனர். மொத்தமாக ரூ.20 லட்சம் சேகரித்த கிராம மக்கள் பணத்தை பாக்கியலட்சுமியிடம் ஒப்படைத்தனர். ஒரு மருத்துவருக்காக கிராமமே கைகோத்த விஷயம் சமூக வலைதளங்களில் பரவியது.
பலரின் பாராட்டுகளை பெற்ற இந்த சம்பவம் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் காதுகளுக்கும் சென்றது. உடனடியாக மருத்துவரின் முழு செலவையும் அரசே ஏற்கும் என அதிரடியாய் அறிவித்துள்ளார். விரைவில் மருத்துவர் பாஸ்கருக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை நடக்கவுள்ளது. ஒரு கிராமத்திற்காக மருத்துவர் உழைத்ததும், பின்னர் அவருக்காக ஒரு கிராமமே கைகோத்து நின்றதும் ஒரு நெகிழ்ச்சி சம்பவமாக பலராலும் பகிரப்படுகிறது.
போலி சாதிச் சான்றிதழ்: ’அம்பாசமுத்திரம் அம்பானி’ பட நடிகை நவ்னீத் எம்.பி.,க்கு அபராதம்