Muhammad Riyas: மருமகன் தகுதி மட்டும் தானா ரியாசுக்கு?
முதல் முறையாக சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முகமது ரியாஸ், விஜயனின் மருமகன் என்பதன் மூலம் இந்த வாய்ப்பைப் பெற்றார் என்றால், அது இடதுசாரிகளின் அரசியல் நேர்மைக்கு கறையாகவே இருக்கும். ஆனால், உண்மையில் அப்படித்தான் நடந்திருக்கிறதா என்பதையும் உறுதிசெய்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
கேரளத்தில் அமையவிருக்கும் பினராயி விஜயனின் இரண்டாவது அமைச்சரவையில் அவரின் மருமகன் முகமது ரியாசுக்கும் இடம் அளிக்கப்பட்டது குறித்து எதிர்மறைக் கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. முதல் முறையாக சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முகமது ரியாஸ், விஜயனின் மருமகன் என்பதன் மூலம் இந்த வாய்ப்பைப் பெற்றார் என்றால், அது இடதுசாரிகளின் அரசியல் நேர்மைக்கு கறையாகவே இருக்கும். ஆனால், உண்மையில் அப்படித்தான் நடந்திருக்கிறதா என்பதையும் உறுதிசெய்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த பி.ஏ.முகமது ரியாஸ், அக்கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேசியத் தலைவராக இருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக் குழுவிலும் உறுப்பினராக உள்ளார். பள்ளியில் படிக்கும்போதே முகமது ரியாசுக்கு சிபிஐ-எம் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தில் ஈடுபாடு வரத் தொடங்கியது. எட்டாவது படிக்கையில் குழுத் தலைவராகவும், அடுத்த ஆண்டு பள்ளியின் மாணவர் சங்கக் கிளைக்கே தலைவராகவும் ஆனார் ரியாஸ்.
பரூக் கல்லூரியில் பியூசி படித்தபோது சங்கத்தின் பிரதிநிதிகளில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1994ஆம் ஆண்டில் அந்தக் கல்லூரியின் இந்திய மாணவர் சங்கத் தலைவராகவும் பின்னர் செயலாளராகவும் முகமது ரியாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பட்டப்படிப்பு, சட்டப்பட்டப்படிப்பு என கோழிக்கோடு மாவட்டத்துக்கு உள்ளேயே படிப்பை முடித்த அவர், புகழ்பெற்ற கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு 1996-97ஆம் கல்வியாண்டில் மாணவர் சங்கத்தின் உறுப்பினராகச் செயல்பட்டவர், 1998-ல் பொறுப்பாளராகவும் மாறினார்.
இப்படி படிப்படியாக முகமது ரியாஸ் வளர்ச்சி அடைந்ததற்கான ஆவணங்கள், சாட்சியங்கள் எல்லாம் இன்றைக்கும் உயிர்ப்போடு இருக்கின்றன.
மாணவர் காலத்துக்குப் பிறகு, ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோழிக்கோடு மாவட்டச் செயலாளராகவும் தலைவராகவும் செயல்பட்டார். தொடர்ந்து, அதே அமைப்பின் மாநில மையத்தில், முதலில் மாநிலத் துணைத் தலைவராகவும் இணைச்செயலாளராகவும் என 7 ஆண்டுகள் பணியாற்றினார்.
அதையடுத்து, வாலிபர் சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், 2017ஆம் ஆண்டு அதன் தலைவராகப் பொறுப்பேற்றார்.
இதற்கிடையே, ஐபிஎஸ் அதிகாரியின் மகனான முகமது ரியாஸ் கட்சிப்பணியே வாழ்க்கைப் பணி என மாற்றிக்கொண்டார். கோழிக்கோடு நகர மோட்டார்வாகன மற்றும் பொறியியல் சங்கத்தின் செயலாளராகச் செயல்பட்டார். அதே நகரில் சிஐடியூ சங்க இணைப்புப் பெற்ற ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் பணிபுரிந்தார்.
கட்சிப்பணியில் ஈடுபட்டவர்களை மக்கள் பிரதிநிதிகளாகவும் பணியாற்றுவதற்கு நிச்சயம் அனுப்புவார்கள் கேரள மக்கள். இதில் இன்ன ஆள் என எந்த பாகுபாடும் பார்ப்பதாகச் சொல்வது அரிது. இதே முறையில்தான் முகமது ரியாசுக்கும் நாடாளுமன்றத் தேர்தலில்... கவனிக்கவேண்டும் மாநிலங்களவைக்கு அல்ல, கோழிக்கோடு தொகுதி மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. இது நடந்தது இப்போது அல்ல, 2009ஆம் ஆண்டில். அதாவது பினராயி விஜயன் முதலமைச்சராகவே வராத காலத்தில்! இன்னும் சொல்லப்போனால் கட்சிக்கு உள்ளேயே பினராயி விஜயனுக்கு செயலாளர் பதவி கிடைக்குமா கிடைக்காத என்கிற போட்டி இருந்த காலகட்டம் அது.
முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் தலைமையிலும் பினராயி விஜயன் தலைமையிலும் இரண்டு பிரிவுகளாக இருந்தததாக சிபிஐ-எம் கட்சி விவகாரம், பொதுவெளியில் விவாதத்துக்கு உள்ளாகியிருந்த சமயம், அது. அது ஒரு பக்கம் இருக்க, 2009 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் பெருந்தலையான எம்கே.ராகவனை எதிர்த்துப் போட்டியிட்ட முகமது ரியாஸ் அதில் தோல்வியடைந்தார் என்பது தனிக்கதை.
இதெல்லாம் எதுக்குனு கேக்கிறீங்களா...
பினராயி கிராமத்தைச் சேர்ந்த விஜயனுக்கு மருமகனா ஆனதாலதான் அவருக்கு இந்தப் பதவி கிடைச்சுதுன்னு சொல்றாங்க பாருங்க அதுக்குதான் இவ்வளவு கதையும். முக்கியமான ஒண்ண மறந்துட்டோம்...
விஜயனோட மூத்த மகள் வீணாவைத்தான் ரியாஸ் கல்யாணம் பண்ணிகிட்டாரு.. கல்யாணம் முடிஞ்சு ஓராண்டுகூட இன்னும் ஆகல. ஆமாம், 2020 ஜூன் 15ஆம் தேதிதான் வீணா- ரியாஸ் கல்யாணம் நடந்துச்சு..
இதுக்குள்ளயும் இன்னொரு விசயம், அது அவங்க தனிப்பட்ட விவகாரம்னாலும், பொதுவாழ்க்கைனு வந்துட்டா சிலதப் பேசியாகணுமே.. அவங்க ரெண்டு பேருக்குமே இது ரெண்டாவது கல்யாணம்!25 வருசம் கட்சிவேலை செஞ்ச முகமது ரியாசை, போன வருசம் முதலமைச்சர் மகள் கல்யாணம் பண்ணிகிட்டாங்கங்கிறத வச்சு, அவருக்கான வழக்கமான நிர்வாக வாய்ப்புகளை தரக்கூடாதுன்னு வரிஞ்சி கட்டுறது நியாயமா? சொல்லுங்க!