Dog Temple: கர்நாடகாவின் 'நாய்' கோயில்… நாய்களை போற்றி வணங்கும் கிராமம்.. பின்கதை என்ன?
கர்நாடக மாநிலம், ராமநகரா மாவட்டம், சன்னபட்னா, அக்ரஹார வலகெரேஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ள தனிச்சிறப்பு வாய்ந்த இந்த 'நாய்' கோயிலில் இரண்டு நாய்கள் தெய்வங்களாக வணங்கப்படுகிறது.
![Dog Temple: கர்நாடகாவின் 'நாய்' கோயில்… நாய்களை போற்றி வணங்கும் கிராமம்.. பின்கதை என்ன? Veeramasti Kempamma Dog temple in Karnataka a village that worships the idol of two dogs What are the specialities Dog Temple: கர்நாடகாவின் 'நாய்' கோயில்… நாய்களை போற்றி வணங்கும் கிராமம்.. பின்கதை என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/26/e0056166f46a0ecb8a6bc44b301f4be61690359673624109_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பல்வேறு மொழிகள், பல்வேறு இனங்கள், பல்வேறு கலாச்சாரங்களின் தொகுப்பாக இந்தியா பிரபலமாக அறியப்படுகிறது. நாட்டில் உள்ள கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் போன்ற வழிபாட்டுத் தலங்கள் உலகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.
கோயில்களைப் பொறுத்தவரை, பல்வேறு நம்பிக்கைகள், முன்னோர் கதைகளை கொண்டு நம்பிக்கை அடிப்படையில் கட்டப்பட்ட சில வியக்கவைக்கும் கோவில்கள் உள்ளன. தனித்துவமான தெய்வங்களைக் கொண்ட இந்தக் கோயில்கள் பல, பலருக்குத் தெரியாத விசித்திரக் கதைகளுடன் தொடர்புடையதாக உள்ளன. கர்நாடக மாநிலம், ராமநகரா மாவட்டம், சன்னபட்னா, அக்ரஹார வலகெரேஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ள 'நாய்' கோயில் அத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த கோயில்களில் ஒன்றுதான்.
எதற்காக வணங்குகிறார்கள்?
நாய்கள், வீரமஸ்தி கெம்பம்மா தேவியின் பாதுகாவலர்களாக நம்பப்படுகின்றன. அக்ரஹார வலகெரேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இங்குள்ள நாய் சிலைகளை வணங்குகின்றனர். நல்ல விஷயங்களை தொடங்கும்போது, அவற்றை மனதில் வைத்து, தங்கள் பிரச்னைகள் தீர்ந்துவிடும் என நம்பி வழிபடுகின்றனர். தங்களது வீட்டில் திருடு போனால் இந்த கோவிலில் உள்ள நாய்களை வணங்குகின்றனர். திருடர்களை இந்த விலங்குகள் தண்டிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையை மனதில் வைத்து, ஒவ்வொரு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் நாய்களுக்கென சிற்பாக பூஜை செய்யப்படுகிறது. வீரமஸ்தி கெம்பம்மா தேவியை வழிபட்ட பிறகு இந்த பூஜை நடைபெறுகிறது.
ஊர்மக்கள் வைத்துள்ள நம்பிக்கை
கோவிலை விட்டு வெளியே வந்த பிறகும், நினைத்த விஷயம் நிறைவேறியதும் நாய்களை நினைவில் கொள்ள வேண்டுமாம், இல்லை என்றால், இந்த விலங்குகளால் தொந்தரவு ஏற்பட நேரிடும் என்று பூர்வீகவாசிகள் நம்புகிறார்கள்.
அதுமட்டுமின்றி அவ்வூரில் நாய்களுக்கு சிறப்பு மரியாதை அளிக்கிறார்கள், அதோடு வீட்டில் எஞ்சிய உணவுகளை நாய்களுக்கு அளிக்கும் பழக்கம் இல்லை. அப்படி செய்தால் தூங்கும்போது மக்களுக்கு விரும்பத்தகாத கனவுகள் வரும் என்று கருதப்படுகிறது. யாராவது நாய்களை பராமரிக்க முடியாவிட்டால், அவர்கள் இந்த கோவிலுக்கு கொண்டு வந்து விட்டுவிடலாம், அங்கு வரும் பக்தர்கள் அவற்றை வணங்கி பிரத்யேகமாக செய்யப்பட்ட பிரசாதத்தை அளிப்பார்கள்.
எதற்காக, யார் கட்டியது?
செய்தி இதழ்களில் வெளியான தகவலின்படி, இந்த கோவிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல பக்தர்கள் வருவதாக கூறப்படுகிறது. இந்த கோவிலை ரமேஷ் என்ற தொழிலதிபர் 2010-ஆம் ஆண்டு கட்டியதாகவும் அந்த அறிக்கைகள் கூறுகின்றன. கிராமவாசிகளின் கூற்றுப்படி, கிராமத்தில் இருந்து இரண்டு நாய்கள் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில், சில நாட்களுக்குப் பிறகு, வீரமஸ்தி கெம்பம்மா தேவி ஒருவரின் கனவில் தோன்றி, காணாமல் போன நாய்களுக்கு கோயில் கட்டும்படி கேட்டதாக கூறப்படுகிறது. அந்த கனவின் அடிப்படையில் ஒரு நாய் கோயில் கட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக காணாமல் போன இரண்டு நாய்களும் இங்கு வணங்கப்படுகின்றன என்பது நம்பிக்கை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)