ஞானவாபி மசூதி வழக்கு: தீர்ப்பை நாளைவரை தள்ளிவைத்த வாரணாசி நீதிமன்றம்! இதுவரை நிகழ்ந்தது என்ன?
வீடியோ வடிவில் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க அஜய் குமார் மிஸ்ரா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. பின்னர், அஜய் குமார் மிஸ்ரா இந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஞானவாபி மசூதி விவகாரத்தில் இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட வாரணாசி நீதிமன்றம் இது தொடர்பான தீர்ப்பை நாளை வரை தள்ளி வைத்துள்ளது.முன்னதாக, கியான்வாபி மசூதி வழக்கு கடந்த ஒரு வாரமாக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வு ஆணையர் விஷால் சிங் (Vishal Singh) தலைமையில் கியான்வாபி (Gyanvapi Masjid) மசூதியில் மேற்கொள்ளப்பட்ட வீடியோ பதிவு தொடர்பான முதற்கட்ட அறிக்கையை மூடி சீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து வாரணாசி நீதிமன்றத்தில் ஆய்வுக் குழு சமர்ப்பித்தது. இந்த அறிக்கை 10 முதல் 12 பக்கங்கள் கொண்டது.
கியான்வாபி மசூதி தொடர்பாக சமர்ப்பிக்கப்படும் இரண்டாவது அறிக்கை இது. மேலும், கடந்த புதன்கிழமை அஜய் குமார் மிஸ்ரா தலைமையில் இரண்டு பக்க ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டது. வீடியோ வடிவில் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க அஜய் குமார் மிஸ்ரா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. பின்னர், அஜய் குமார் மிஸ்ரா இந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த இரண்டாவது அறிக்கையில், விஷால் சிங் மற்றும் அஜய் பிரதாப் சிங் இருவரும் இணைந்து மேற்கொண்ட் ஆய்வு 1,500 போட்டோகள் மற்றும் 10 மணி நேர வீடியோ ஆகியவற்றை உள்ளடக்கியது. இதன் அடிப்படையிலேயே அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அஜய் குமார் மிஸ்ராவின் ஆய்வு மே, 6 மற்றும் 7 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. விஷால் சிங் அறிக்கை மே, 14, 15, 16 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வினை அடிப்படையாக கொண்டது. வழக்கு பின்னணி:
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் கியான்வாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி, கோயிலை இடித்து முகலாய பேரரசர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதாக புகார் கூறப்படுகிறது. மேலும், மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினசரி தரிசிக்க உத்தரவிடக் கோரிய வழக்கும் உள்ளது. வாரணாசியை சேர்ந்த இந்துப் பெண்கள் 5 பேர் சேர்ந்து இந்த வழக்கைத் தொடர்ந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில், வாரணாசி சிவில் நீதிமன்ற நீதிபதி ரவி குமார் திவாகர் 3 நாட்கள் கள ஆய்வு மற்றும் ஆய்வு முழுமையாக வீடியோ பதிவும் செய்யப்பட வேண்டும் என்று உத்திரவிட்டார்,. அதன்படி, கியான்வாபி மசூதிக்குள் கள ஆய்வு நடைபெற்றது.
கள ஆய்வில், தொழுகைக்கு முன்பாக கை, கால்களை சுத்தப்படுத்தும் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இதையடுத்து, சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்படும் மசூதியின் ஒரு பகுதி நீதிமன்ற உத்தரவின்படி கையகப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஒசுகானாவில் உள்ள சிவலிங்கத்தை அளக்கவும், அதை சுற்றியுள்ள சுவரை உடைக்கவும் இந்துக்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மிஸ்ராவின் அறிக்கையின்படி, ”முஸ்லீம் தரப்பு மசூதி என்று கூறும் சர்ச்சைக்குரிய கட்டமைப்பிற்குள், மத்தியப் பகுதியின் வடமேற்குப் பகுதியில், தடுப்பிற்கு வெளியே இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் கல் சிற்பங்கள் உள்ளன. தாமரை மற்றும் சிலைகள் போன்ற இந்து சின்னங்களைக் கொண்ட பழங்கால கல் கட்டமைப்புகள், முந்தைய இந்து கோவிலின் எச்சங்கள், ஞானவாபி அமைப்பில் தெளிவாகக் காணப்படுகின்றன” தெரிவிக்கப்பட்டுள்ளது. "பழைய கட்டமைப்புகளுக்கு அருகே இரும்பு கம்பிகள் மற்றும் கான்கிரீட்டைப் பயன்படுத்தி 'புதிய' கட்டுமானப் பணிகள் நடந்துள்ளன. வடக்குப் பக்கத்திலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும்போது, பழைய கல் செதுக்கப்பட்ட ‘சேஷ்நாக்’ சிற்பங்களைக் காணமுடிகிறது. இவை அனைத்தும் ஆதாரங்களுக்காக வீடியோ படம் எடுக்கப்பட்டுள்ளது. கல் பலகைகளில் காவி வண்ணம் பூசப்பட்ட பழைய சிற்பங்களும் உள்ளன, மேலும் இதுபோன்ற பல சிற்பங்கள் தெளிவாக இந்து சிலைகள் மற்றும் சின்னங்கள் கியான்வாபி வளாகத்திற்குள் இருக்கின்றன” என்று அறிக்கையில் கூறியுள்ளார்.