Vande Bharat Rail: செம்ம! கோவை டூ பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில்...தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி - கட்டணம் எவ்வளவு?
டிசம்பர் 30ஆம் தேதி கோயம்புத்தூர் - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
Vande Bharat Rail: டிசம்பர் 30ஆம் தேதி கோயம்புத்தூர் - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
வந்தே பாரத் ரயில்:
இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டை பொருத்தவரை, சென்னை - கோவை, சென்னை - நெல்லை, சென்னை இருந்து பெங்களூர் வழியாக மைசூர் என மொத்த மூன்று ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் ஜனவரி 1ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. அதாவது, டிசம்பர் 30ஆம் தேதி கோயம்புத்தூர் - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
கோவை டூ பெங்களூரு:
இதற்கான தொடக்க விழா கோயம்புத்தூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற உள்ளது. வாரணாசியில் இருந்தப்படியே பிரதமர் மோடி கோவை - பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க உள்ளார். பொதுவாக கோவையில் இருந்து பெங்களூருவுக்கு செல்ல 7 மணி நேரம் 45 நிமிடங்கள் ஆகும். ஆனால், வந்தே பாரத் ரயிலில் பயணிப்பதன் மூலம் 2 மணி நேரம் குறைந்துவிடும் என்று தெரிகிறது. அதாவது, 5 மணி நேரம் 40 நிமிடத்தில் பெங்களூருவுக்கு சென்றுவிடலாம்.
இந்த வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகள் உள்ளன. இதில் 32 இருக்கைகள் கொண்ட ஒரு எக்ஸிகியூட்டி சேர் கார், 72 இருக்கைகள் கொண்ட 5 ஏசி சேர் கார் பெட்டிகள் உள்ளன. இது தவிர என்ஜினுடன் இணைந்த வகையில் 2 ஏசி சேர் கார் பெட்டிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் 40 இருக்கைகள் உள்ளன. இதற்கான டிக்கட் கட்டணம் ரூ.1,850 ஆகவம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏசி சேர் கார் டிக்கெட் கட்டணம் ரூ.1,000 ஆகவும், எக்ஸிகியூட்டிவ் சேர் கார் டிக்கெட் ரூ.1,850 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எங்கெங்கு நின்று செல்லும்?
இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஓசூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அதிகாலை 5.00 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரயில், காலை 11.30 மணிக்கு பெங்களூருவுக்கு சென்றடைகிறது. திருப்பூர், ஈரோடு, சேலம், ஓசூர் வழியாக பெங்களூருரை சென்றடையும். அதேபோல, பெங்களூருவில் இருந்து பகல் 1.40 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 8.00 மணிக்கு கோவைக்கு வந்தடையும். இந்த ரயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு கோவையில் இருந்து வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. இதில், ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். கோவையில் இருந்து 5.30 மணிக்கு புறப்பட்ட ரயில், பகல், 11.30 மணிக்கு பெங்களூருவுக்கு சென்றடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.