watch video: உபி தேர்தல்: சீட் கிடைக்காததால் கதறி அழுத பகுஜன் சமாஜ் உறுப்பினர்!
தேர்தலில் போட்டியிட கட்சியினர் சீட் தராததால் கதறி அழும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
பகுஜன் சமாஜ் கட்சி தனக்கு தேர்தலில் போட்டியிட சீட் தர மறுத்ததால் அந்தக் கட்சி உறுப்பினர் ஒருவர் கதறி அழும் காட்சி வைரல் ஆகியுள்ளது. உத்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் 10ந் தேதி மாநில சட்டமன்றத்துக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சிகள் முடிவு செய்து வருகின்றன, இதற்கிடையே மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த அர்ஷத் ரானா என்பவர் தனக்கு தேர்தலில் போட்டியிட கட்சியினர் சீட் தராததால் கதறி அழும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. அர்ஷத் ரானா 24 வருடங்களாக பகுஜன் சமாஜ் கட்சியில் பணிபுரிபவர். மேலும் 2018ல் கட்சிக் கூட்டத்திலேயே 2022 தேர்தலில் இவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என அதிகார பூர்வமாகச் சொல்லப்பட்டிருக்கிறது,
#WATCH उत्तर प्रदेश: BSP कार्यकर्ता अरशद राणा यह दावा करते हुए फूट-फूट कर रोने लगे कि आगामी चुनावों के लिए पार्टी की तरफ़ से उन्हें टिकट देने का वादा किया गया था। लेकिन उन्हें अंतिम समय में टिकट से वंचित कर दिया गया। (13.01) pic.twitter.com/HXYBsNG359
— ANI_HindiNews (@AHindinews) January 14, 2022
இதுகுறித்து அழுதபடியே பேசியுள்ள ரானா, ‘தேர்தலில் போட்டியிட 50 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றார்கள். நான் ஏற்கெனவே 4-5 லட்சம் வரை செலவு செய்துவிட்டேன். இப்போது கடைசி நிமிடத்தில் வேட்பாளரை மாற்றி அறிவித்திருக்கிறார்கள். என்னைக் கேலிப் பொருளாக்கிவிட்டார்கள்’ என உணர்ச்சி ததும்ப பேசியுள்ளார்.
இந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டியிடுகிறது. பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக நடக்கும் தேர்தலின் முடிவுகள் மார்ச் 10ந் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றன. முன்னதாக தங்களது கட்சியின் வேட்பாளராக உன்னாவ் பகுதியில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் தாயை அந்தப் பகுதியின் பங்கர்மாவ் தொகுதியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது.
கடந்த 2017ல் உன்னாவ் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் என்பவர் 19 வயதுப் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த காரணத்தால் பதவிநீக்கம் செய்யப்பட்டு குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குல்தீப்பின் ஆட்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் தந்தையை தாக்கியதில் காயம் காரணமாக அவர் அடுத்த தினமே உயிரிழந்தார்.
தன் தந்தைத் தாக்கப்பட்டதை அறிந்த அந்தப் பெண் தற்கொலை செய்துகொள்ள முயன்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்துதான் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குல்தீப் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. தற்போது குல்தீப் சிங் பதவிவகித்த அதே தொகுதியில்தான் காங்கிரஸ் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் தாயை வேட்பாளராக நிறுத்தியுள்ளது காங்கிரஸ்.