திக்திக் நிமிடங்கள்! இறுதி கட்டத்தை எட்டிய பணிகள்...41 தொழிலாளர்களை மீட்க எவ்வளவு மணி நேரம் ஆகும்? பரபர தகவல்!
உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
உத்தரகாசி சுரங்க விபத்து:
உத்தரகண்டின் சார் தாம் வழித்தடத்தில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி, கடந்த 12ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து இடிந்து விழுந்தது. இதனால், உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் வெளியேறும் பாதை துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் களமிறங்கினர். ஆனால், மீட்புக் குழுவினர் ஒவ்வொரு முயற்சியின் போதும் ஒவ்வொரு நாளும் புதுப்புது சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
சுரங்கத்தில் துளையிடும் போது இயந்திர கோளாறு ஏற்பட்டு மீட்பு பணியில் தடை நீடித்தது. அதேபோல் துளையிடும் போது மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால் மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு 6 இஞ்ச் பைப் மூலம் உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. சாதாரண உணவுகளை சாப்பிட்டால், இயற்கை உபாதைகளை கழிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், மருத்துவர்கள் பரிதுரைக்கும் உணவுகள் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. நேற்று கூட, ரொட்டி, சத்தான கஞ்சி, அவித்த முட்டை வழங்கப்பட்டன.
இறுதி கட்டத்தை எட்டிய மீட்புப் பணி:
இந்நிலையில், 17வது நாளாக மீட்பு பணிகள் சுரங்கத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி பணியை எட்டியுள்ளது. இன்னும் 2 மீட்டர் துளையே தோண்ட வேண்டியுள்ளது. தோண்டி முடித்தவுடன் ஒவ்வொரு தொழிலாளர்களும் மீட்கப்படுவார்கள். இதுகுறித்து லெப்டினன்ட் ஜெனரல் சையத் அடா ஹஸ்னைன் கூறுகையில், "இன்னும் 2 மீட்டர் தான் உள்ளது. உள்ளே சிக்கியிருந்த தொழிலாளர்களின் சத்தம் எங்களுக்கு கேட்டது.
#WATCH | On evacuation of trapped workers from Silkyara tunnel, Lt Gen Syed Ata Hasnain (Retd), Member, NDMA says, "It is estimated that it will take 3-5 minutes to evacuate each of the 41 persons. The entire evacuation is expected to take 3-4 hours. Three teams of NDRF will go… pic.twitter.com/UyJvWSFRTJ
— ANI (@ANI) November 28, 2023
அவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 41 தொழிலாளர்கள் ஒவ்வொருவரையும் வெளியேற்ற 3-5 நிமிடங்கள் ஆகும். மீட்பு பணி முழுமையாக முடிவடைய 3 அல்லது 4 மணி நேரம் ஆகும். சுரங்கப்பாதையில் இருந்து வெளியேற்றத்தை ஒழுங்கமைக்க மூன்று குழுக்கள் உள்ளன.
எவ்வளவு மணி நேரம் ஆகும்?
மாவட்ட மருத்துவமனையில் 30 படுக்கை வசதி தயாராக உள்ளது. மேலும் 10 படுக்கை வசதியும் தயார் நிலையில் உள்ளது. தொழிலாளர்கள் மீட்கப்பட்டவுடன் உடல்நலம் குறித்து ஆய்வு செய்ய ஆம்புலன்ஸ், ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளனன. 400 மணி நேரத்திற்கும் மேலான இந்த மீட்பு பணி இன்று முடியும் என்று நம்புகிறேன்.
அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் செயல்படுத்தப்படும். முன்கூட்டியே அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படக்கூடாது. தொழிலாளர்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம். தொழிலாளர்களை நாங்கள் கண்டிப்பாக மீட்போம். அவசரப்படத் தேவையில்லை" என்றார். கடந்த 17 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட கடின உழைப்புக்கு தற்போது பலன் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.