வேட்டையாடச் சென்ற 4 இளைஞர்கள் மரணம் - உத்தரகாண்ட் மாநிலத்தில் சோகம்
உத்தரகண்ட் மாநிலம் தெஹ்ரி மாவட்டத்தில் அமைந்துள்ள வனப்பகுதிக்கு வேட்டையாட சென்ற ஒருவர் எதிர்பாராத விதமாக தனது கூட்டாளர்களால் சுடப்பட்டார்
உத்தரகண்ட் மாநிலம் தெஹ்ரி மாவட்டத்தில் அமைந்துள்ள வனப்பகுதிக்கு வேட்டையாட சென்ற ஒருவர் எதிர்பாராத விதமாக தனது கூட்டாளர்களால் சுடப்பட்டார். இந்த துயர நிகழ்வை தாங்கி கொள்ளாத உயிரிழந்தவரின் மூன்று கூட்டளார்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு, உத்தரகாண்ட் மாநிலம், பிலங்கனா வட்டத்தில் அமைதுள்ள வனப்பகுதிக்கு ஏழு இளைஞர்கள் வேட்டையாட சென்றதாக கூறப்படுகிறது. குழுவிற்கு தலைமை தாங்கிய 22 வயதான ராஜீவ் நிலை தடுமாறி கீழே விழுந்த போது, அவரது தோள்பட்டையில் இருந்த வேட்டை துப்பாக்கி வெடித்ததில், அருகே இருந்த சந்தோஷ் என்பவர் மீது குண்டு பாய்ந்தது. தரையில் மயங்கிய சந்தோஷ் ரத்தக் காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைக் கண்ட மற்ற இளைஞர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அப்போது, ராஜீவ் சம்பவ இடத்தை விட்டு ஓடத் தொடங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், பயம் மற்றும் குற்ற உணர்ச்சி காரணமாக சோபன், பங்கஜ் மற்றும் அர்ஜுன் ஆகிய மூவர் பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டதாக கூறப்படுகிறது.
துணை மாஜிஸ்திரேட் பிஆர் சவுகான் இதுகுறித்து கூறுகையில், " ராகுல், சுமித் ஆகிய இருவர் கிராமத்திற்கு விரைந்து சம்பவம் குறித்து எச்சரித்ததாக தெரிவிக்கப்படுகிறது. கிராம மக்கள் பூச்சிக் கொல்லி மருந்து உட்கொண்ட மூன்று போரையும் அருகில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர். பங்கஜ் மற்றும் அர்ஜுன் மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்டனர். சோபன் சிகிச்சையின் போத மரணம் அடைந்தார்" என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் அறிந்த காவல்துறை வழக்குப் பதிவு விசாரித்து வருகிறது. தப்பி ஓடிய ராஜீவ் சிங்கை தேடி வருகின்றனர். எதிர்பாராத நிகழ்வாக நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.