(Source: ECI/ABP News/ABP Majha)
உத்தரபிரதேச இடைத்தேர்தல்; காங்கிரஸ் - சமாஜ்வாதி இடையே வலுக்கும் மோதல் - காரணம் என்ன?
உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் - சமாஜ்வாதி இடையே மோதல் வெடித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக திகழ்வது உத்தரபிரதேசம் ஆகும். 80 மக்களவைத் தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் மொத்தம் 403 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் மத்தியில் யார் ஆட்சியமைக்கப் போவது யார்? என்பதை தீர்மானிக்கும் சக்தி கொண்ட மாநிலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேச இடைத்தேர்தல்:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் 9 எம்.எல்.ஏ.க்கள் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்வானார்கள். ஏற்கனவே உத்தரபிரதேசத்தில் உள்ள சிசாமௌ தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்த சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த இர்ஃபான் சோலங்கி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால், மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிதகள் உத்தரபிரதேசத்தில் காலியாக உள்ளது.
மில்கிபூர் தொகுதி தொடர்பான வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தேர்தல் ஆணையம் உத்தரபிரதேசத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தது. உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.விற்கு நிகரான பலம் கொண்ட கட்சியாக உலா வருவது சமாஜ்வாதி.
காங்கிரசுக்கு வெறும் 2 சீட்டுகள்:
இதனால், இடைத்தேர்தல் நடைபெற உள்ள 9 தொகுதிகள் மற்றும் மில்கிபூர் தொகுதியையும் சேர்த்து மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகளில் 8 தொகுதிகளில் போட்டியிட சமாஜ்வாதி முடிவு செய்துள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 2 தொகுதிகளை ஒதுக்க சமாஜ்வாதி முடிவு செய்துள்ளது.
ஆனால், சமாஜ்வாதியின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சி விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 5 சட்டமன்ற தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சமாஜ்வாதியினர் காங்கிரசுக்கு 2 சீட்டுகள் மட்டுமே தரப்படும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
கூட்டணியில் குழப்பமா?
உ.பி.யில் உள்ள மீராபூர், கண்டர்கி, காசியாபாத், கைர், கர்ஹல், சிஷாமௌ, பூல்பூர், கடேஹரி, மஜ்ஹவான் ஆகிய 9 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி உடன்பாட்டில் முழு சம்மதம் இல்லாத சூழலில், சமாஜ்வாதி கர்கல், சிசாமௌ, மில்கிபூர், கடேஹரி, பூல்பூர் மற்றும் மஜ்ஹவான் ஆகிய 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துவிட்டது.
சமாஜ்வாதியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சௌத்ரி இதுதொடர்பாக கூறும்போது, காங்கிரசுடான எங்கள் உடன்பாடு இறுதி செய்யப்பட்டுவிட்டது. 10 தொகுதிகளில் கைர் மற்றும் காசியாபாத் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும். மீதமுள்ள 8 தொகுதிகளில் சமாஜ்வாதி போட்டியிடும் என்று தெரிவித்தார். ஆனால், உத்தரபிரதேச காங்கிரஸ் மாநில தலைவர் அஜய்ராய் நாங்கள் 5 தொகுதிகளை தற்போது வரை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் என்று கூறினார். இடைத்தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் சமாஜ்வாதி – காங்கிரஸ் இடையே மோதல் வெடித்துள்ளது இந்தியா கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.