இந்தியாவிற்கு 99ஆண்டுகள் சுதந்திரம் லீஸ்.. பாஜக பெண் பிரமுகரின் சர்ச்சை கருத்து..
பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணியான யுவ மோர்சா அமைப்பின் செயற்பாட்டாளர் ருச்சி பதக் பேசிய கருத்து சர்ச்சையாகி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு உள்ள பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆங்காங்கே தேர்தல் தொடர்பான கூட்டங்கள் மற்றும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி ஒரு தொலைக்காட்சி ஒன்று தேர்தல் தொடர்பான விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று விவாதித்துள்ளனர். அந்த விவாதத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணியான யுவ மோர்சா அமைப்பின் பிரமுகர் ருச்சி பதக் பங்கேற்றார். இந்த விவாதத்தின் போது அவர் பேசிய கருத்து ஒன்று மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
WhatsApp ने क्या हाल कर दिया मूर्खों का pic.twitter.com/BlbWQMP6Xy
— Vinod Kapri (@vinodkapri) October 26, 2021
அதாவது இந்த விவாதத்தில் பேசிய அவர், “இந்திய நாட்டிற்கு இன்னும் முழுமையாக சுதந்திரம் கிடைக்கவில்லை” என்று முதலில் கூறினார். உடனடியாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த மக்களிடம் இருந்து பெரும் எதிர்ப்பு வந்தது. அதைத் தொடர்ந்து விவாதத்தின் தொகுப்பாளர் ருச்சியிடம் அதற்கான விளக்கத்தை கேட்டார். அதற்கு அவர், “இந்திய சுதந்திர போராட்டத்தின் போது இருந்த மிகப்பெரிய தலைவர் மகாத்மா காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு ஆகிய இருவரும் ஆங்கிலேயே அரசுடன் பேசி இந்தியாவிற்கு 99 ஆண்டுகளுக்கு லீஸ் வடிவில் சுதந்திரத்தை பெற்றனர். 1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வந்த பிறகு தான் இந்தியாவில் முதல் தேர்தல் நடைபெற்றது. இந்த 99 ஆண்டுகள் லீஸ் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கும் தெரியும்” என்று கூறினார்.
அவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் அவருடைய கருத்திற்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் பலரும் ருச்சி பதக்கை சாடி வருகின்றனர். இப்படி வரலாறு கூட சரியாக படிக்காமல் ஒருவர் எப்படி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதிலும் குறிப்பாக ஒரு முக்கியமான கட்சியின் இளைஞரணி செயற்பாட்டாளர் ஒருவர் இப்படி பேசியது சரியல்ல என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: போதைப்பொருள் வழக்கு : ஷாரூக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது மும்பை உயர்நீதிமன்றம்..