ஹலால் உணவுக்கு தடை... உத்தரப்பிரதேச அரசு அதிரடி உத்தரவு
ஹலால் சான்றிதழ் வழங்கப்படும் உணவுகளுக்கு உத்தரப் பிரதேச அரசு தடை விதித்துள்ளது.
மத்தியில் பாஜக அரசு அமைந்ததில் இருந்தே, சிறுபான்மையினரை குறிவைத்து பல நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்துப வருகிறது. முத்தலாக் தொடங்கி குடியுரிமை திருத்த சட்டம் வரை பாஜக எடுத்த பல நடவடிக்கைகள் இஸ்லாமிய சமூகத்தினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
குறிவைக்கப்படுகின்றனரா இஸ்லாமியர்கள்?
அதுமட்டும் இன்றி, இஸ்லாமிய சமூகத்தை குறிவைத்து நடத்தப்படும் கலவரங்களும் கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. 2014 தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு நடந்த முசாபர்நகர் கலவரம் தொடங்கி இந்தாண்டு ஹரியானாவில் நடந்த நூ கலவரம் வரை, இஸ்லாமியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட கலவரங்கள் என சொல்லி கொண்டே போகலாம்.
இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜக தலைவர்கள் செய்யும் வெறுப்பு பிரச்சாரங்கள் காரணமாக இஸ்லாமியர்கள் அச்சத்தில் வாழ்ந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், ஹலால் சான்றிதழ் வழங்கப்படும் உணவுகளுக்கு உத்தரப் பிரதேச அரசு தடை விதித்துள்ளது. ஹலால் உணவை மட்டுமே உண்ணும் இஸ்லாமியர்களுக்கு இது பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஹலால் உணவுக்கு தடை விதித்து உணவு ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில், "ஹலால் உணவை தயாரிப்பதற்கும் சேமித்து வைப்பதற்கும் விநியோகிப்பதற்கும் விற்பனைக்கும் உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹலால் உணவுக்கு தடை விதித்த பாஜக அரசு:
உணவுப் பொருட்களுக்கு வழங்கப்படும் ஹலால் சான்றிதழ், உணவுப் பொருட்களின் தரம் தொடர்பான குழப்பத்தை உருவாக்கும் வகையில் உள்ளது. சட்டப்பிரிவு 89 கீழ் ஏற்றுக்கொள்ள முடியாது. உணவுப் பொருட்களின் தரத்தை தீர்மானிக்கும் உரிமை, அந்தச் சட்டத்தின் 29வது பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு மட்டுமே உள்ளது. அவர்கள் சட்டத்தின் விதிகளின்படி தொடர்புடைய தரங்களைச் சரிபார்க்கிறார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹலால் இந்தியா பிரைவேட் லிமிடெட் சென்னை, ஜமியத் உலமா-இ-ஹிந்த் ஹலால் டிரஸ்ட் டெல்லி, ஹலால் கவுன்சில் ஆஃப் இந்தியா மும்பை, ஜமியத் உலமா மகாராஷ்டிரா உள்பட பிற நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹலால் சான்றிதழ் வழங்கி விற்பனையை அதிகரிக்க மத உணர்வுகளை பயன்படுத்திக் கொண்டதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹலால் சான்றிதழ் இல்லாத நிறுவனங்கள் தயாரிக்கும் உணவு பொருள்களின் விற்பனையை குறைக்க சதி திட்டம் தீட்டப்படுவதாக புகார் எழுந்த நிலையில், மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பொதுவாக, ஹலால் உணவை மட்டுமே இஸ்லாமியர்கள் உண்பார்கள். உணவாக உண்ணப்படும் விலங்குகளை சில வழிமுறைகளை பின்பற்றியே கொல்ல வேண்டும். கழுத்து நரம்பு, தமனி, மூச்சுக்குழாய் ஆகியவற்றை அறுத்து கொல்லப்படும் விலங்குகளின் இறைச்சிக்கு மட்டுமே ஹலால் சான்றிதழ் வழங்கப்படும்.