சிங்கப்பூர் முதல் பிரான்ஸ் வரை.. அசுர வளர்ச்சி கண்ட UPI.. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் புதிய உச்சம்!
டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனையானது கடந்த 2017-18 நிதியாண்டில் 2,071 கோடியிலிருந்து 2023-24 நிதியாண்டில் 18,737 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள நிதிச் சேவைகள் துறை (DFS), நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) போன்ற விரைவான கட்டண முறையை ஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்துவதற்கான முயற்சிகள் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன.
இது கோடிக்கணக்கானவர்களுக்கு உடனடியான, பாதுகாப்பான, தடையற்ற பணப்பரிவர்த்தனைகளை செயல்படுத்துகிறது. ரொக்கப் பணமில்லா, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரம் என்ற அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்த முயற்சி அமைந்துள்ளது.
முந்தைய நிதியாண்டுகளுடன் ஒப்பிடுகையில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையானது 2023-24-ம் நிதியாண்டில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வளர்ச்சி:
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளன. டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனைகளின் மொத்த எண்ணிக்கை 2017-18 நிதியாண்டில் 2,071 கோடியிலிருந்து 2023-24 நிதியாண்டில் 18,737 கோடியாக 44% வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) அதிகரித்துள்ளது.
மேலும், நடப்பு 2024-25 நிதியாண்டின் 5 மாதங்களில் (ஏப்ரல்-ஆகஸ்ட்) பரிவர்த்தனை அளவு 8,659 கோடியை எட்டியுள்ளது. பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.1,962 லட்சம் கோடியிலிருந்து 11% வளர்ச்சியுடன் ரூ.3,659 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
கூடுதலாக, நடப்பு 2024-25 நிதியாண்டின் கடந்த 5 மாதங்களில் (ஏப்ரல்-ஆகஸ்ட்), மொத்த பரிவர்த்தனை மதிப்பு ரூ.1,669 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைச் சூழல் அமைப்பின் முக்கிய அம்சமாக யுபிஐ உள்ளது.
சாமானியனுக்கும் அதிகாரம்:
பங்கேற்கும் வங்கிகள், நிதி தொழில்நுட்பத் தளங்களின் வளர்ந்து வரும் கட்டமைப்பு ஆகியவற்றால் மிகவும் விருப்பமான முறையாக யுபிஐ மாற்றியுள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை புரட்சி அதன் எல்லைகளைத் தாண்டி விரிவடைந்து வருகிறது.
யுபிஐ, ரூபே இரண்டும் உலகளவில் வேகமாக விரிவடைந்து வருகின்றன. இது வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும் பயணம் செய்யும் இந்தியர்களுக்கு தடையற்ற பரிவர்த்தனைகளை செயல்படுத்துகிறது. தற்போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், பூட்டான், நேபாளம், இலங்கை, பிரான்ஸ், மொரீஷியஸ் போன்ற முக்கிய சந்தைகள் உட்பட 7 நாடுகளில் யுபிஐ உள்ளது.
இது இந்திய நுகர்வோர் மற்றும் வணிகங்களை சர்வதேச அளவில் பணம் செலுத்தவும் பெறவும் அனுமதிக்கிறது. இந்த விரிவாக்கம் பணம் அனுப்புவதை மேலும் ஊக்குவிக்கும், நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதுடன் உலகளாவிய நிதி நிலப்பரப்பில் இந்தியாவின் அந்தஸ்தை உயர்த்தும்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் உலகளாவிய தலைவராக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. யுபிஐ-யின் உலகளாவிய விரிவாக்கம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் தொடர்ச்சியான எழுச்சியுடன், நிதி உள்ளடக்கம் மற்றும் சாமானிய குடிமகனின் பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றில் இந்தியா புதிய வரையறைகளை அமைத்து வருகிறது.