UP Peculiar Complaint: இரவில் பாம்பாக மாறும் மனைவி; உ.பி-யில் தலைசுற்ற வைத்த விநோத புகார் - விசாரிக்கும் காவல்துறை
உத்தர பிரதேசத்தில், தன்னுடைய மனைவி இரவில் பாம்பாக மாறி தன்னை கொல்ல வருவதாக ஒருவர் அளித்துள்ள விநோத புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

உத்தர பிரதேசத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டததிற்கு வந்த ஒருவர், தன்னுடைய மனைவி இரவில் பாம்பாக மாறுவதாகவும், தன்னை கடித்துக் கொல்ல பல முறை முயற்சித்ததாகவும் புகாரளித்த சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அவரது புகார் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
குறைதீர் முகாமில் வந்த விநோத புகார்
உத்தர பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில், சமதான் திவாஸ், அதாவது பொதுமக்கள் குறை தீர்க்கும் நாளின் போது, வழக்கமாக மின்சாரம், சாலைகள், ரேஷன் கார்டுகள் உள்ளிட்டவைகள் தொடர்பான பிரச்னைகள் குறித்த புகார்களை மக்கள் மாவட்ட நீதிபதியிடம் கொண்டு வருவார்கள். அந்த வகையில், சமீபத்தில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த மஹ்மூதாபாத் பகுதியில் உள்ள லோத்சா கிராமத்தில் வசிக்கும் மீராஜ் என்பவர், "ஐயா, என் மனைவி நசீமுன் இரவில் பாம்பாக மாறி என்னைக் கடிக்க என் பின்னால் ஓடுகிறாள்" என்று கூறி புகார் அளித்தார்.
தனது மனைவி பலமுறை தன்னைக் கொல்ல முயன்றதாகவும், ஆனால், ஒவ்வொரு முறையும் தாக்குதலைத் தடுக்க சரியான நேரத்தில் தான் விழித்தெழுந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். "என் மனைவி என்னை மனரீதியாக சித்திரவதை செய்கிறாள், நான் தூங்கும்போது எந்த இரவில் வேண்டுமானாலும் என்னைக் கொல்லக்கூடும்" என்றும் அவர் புலம்பியுள்ளார்.
சமூக வலைதளத்தில் கிண்டல்
அவரது புகார் குறித்த தகவல் சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து, அது குறித்த கிண்டல் பதிவுகளை பலரும் பதிவிட்டுள்ளனர்.
"யாரை எல்லாம் அவள் கடிக்கப் போகிறாள் என்று யாருக்குத் தெரியும்" என்று ஒருவர் கருத்து தெரிவித்தார். இதேபோல், மற்றொருவர், "அவளுடைய நாகமணியை எங்காவது மறைத்து வைத்துள்ளாயா ?" என்று மீராஜிடம் கிண்டலாக கேட்டுள்ளார்.
வேறு ஒருவர், "நீங்களும் ஒரு நாகப்பாம்பாக மாற வேண்டும்" என்று ஒரு கருத்தை பதிவிட்டார். இவற்றுக்கெல்லாம் ஹைலைட்டாக, "அந்த மனிதர் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவர் தனது திருமண வாழ்க்கையில் ஸ்ரீதேவியைக் கண்டுபிடித்தார்" என்று ஒருவர் கூறியுள்ளார். 1986-ம் ஆண்டு வெளியான நாகினா திரைப்படத்தில், வடிவத்தை மாற்றும் பாம்பாக நடித்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியைப் பற்றி தான் அவர் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதி
இந்நிலையில், அந்த புகார் குறித்த விசாரணைக்கு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். துணைப்பிரிவு நீதிபதி மற்றும் காவல்துறையினர் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அவர் அறிவுறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து, ஒரு வேளை இது மனரீதியான துன்புறுத்தலாக இருக்கலாம் என்று கருதி, காவல் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.





















