UP election 2022: உ.பி தேர்தல்: பாஜகவில் இணைகிறார் முலாயம் சிங் யாதவ் மருமகள் அபர்ணா யாதவ்?
UP election 2022: நடைபெற இருக்கும் உத்தர பிரதேச சட்டபேரவை தேர்தலை பொறுத்தவரை பாஜக, சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ்கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது.
சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவ் நாளை பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் சமாஜ்வாதி கட்சிக்கு பின்னடைவாக அமையும் என தெரிகிறது.
உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது. உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில், முதல்கட்ட தேர்தல் பிப்ரவரி 10 ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 14ஆம் தேதியும், 3ஆம் கட்ட தேர்தல் பிப்.20ஆம் தேதியும், 4ஆம் கட்ட தேர்தல் பிப்.24ஆம் தேதியும், 5 ஆம் கட்ட தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதியும்,ஆறாம் கட்ட தேர்தல் மார்ச் 3ம தேதியும், 7ம் கட்டதேர்தல் மார்ச் 7ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முலாயம் சிங் யாதவின் மகன் ப்ரதீக் யாதவின் மனைவியான அபர்ணா யாதவ், கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தலைநகர் லக்னோவின் ராணுவக் குடியிருப்பு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். எனினும், சமூலவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அபர்ணா யாதவ், அவ்வப்போது கருத்துகளை பதிவிட்டு கவனிக்கத்தக்க வகையில் அரசியலில் ஈடுபட்டு வந்தார். மக்களிடம் பரிச்சயமான முகமாக இருக்கும் அபர்ணா யாதவ், பாஜகவில் இணைவது உத்தரப் பிரதேச தேர்தலில் பல மாற்றங்களை உண்டாக்கும் என தெரிகிறது.
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேசத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 325-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், நடைபெற இருக்கும் உத்தர பிரதேச சட்டபேரவை தேர்தலை பொறுத்தவரை பாஜக, சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ்கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது.
பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களே சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து வரும் நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவரின் மருமகள் பாஜகவில் சேர்வது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்