`காங்கிரஸ் அரசு பிரதமருக்குத் தீங்கு விளைவிக்க முயன்றுள்ளது!’ - ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு!
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பஞ்சாபில் பிரதமர் மோடியின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டு அங்கு ஏற்பட்ட பாதுகாப்புக் குறைப்பாட்டுக்குப் பஞ்சாப்பை ஆளும் காங்கிரஸ் அரசே காரணம் என விமர்சித்துள்ளார்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கான அமைச்சர் ஸ்மிருதி இரானி பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடியின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டு அங்கு ஏற்பட்ட பாதுகாப்புக் குறைப்பாட்டுக்குப் பஞ்சாப்பை ஆளும் காங்கிரஸ் அரசே காரணம் எனக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஸ்மிருதி இரானி, `காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியை வெறுக்கிறது என நமக்குத் தெரியும். இன்று அவர்கள் நம் பிரதமருக்குத் தீங்கு விளைவிக்க முயன்றுள்ளனர்’ எனக் கூறியுள்ளார். `பிரதமருக்குத் தீங்கு விளையுமாறு சூழலைத் தெரிந்தே உருவாக்கியுள்ளது பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் அரசு’ எனக் கடுமையாக விமர்சித்துள்ளார் அவர்.
மேலும் பேசிய ஸ்மிருதி இரானி, பிரதமர் பயணம் மேற்கொள்ளும் வழியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எப்படி அதே நேரத்தில் சரியாகப் போராட்டம் செய்தனர் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். `அதிகளவிலான எண்ணிக்கையில் மக்கள் அந்த இடத்தை எட்டியது வெறும் தற்செயல் அல்ல. இது ஒரு சதித் திட்டம். பிரதமரின் பாதுகாப்புக் குறைபாட்டுக்கு யார் காரணம்? பஞ்சாப் காவல்துறை மௌனம் காத்துள்ளது. எந்தவொரு பாதுகாப்பு விதிமுறையும் பின்பற்றப்படவில்லை’ எனவும் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
பஞ்சாபில் என்ன பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டது?
பஞ்சாபின் மேம்பாலம் ஒன்றில் போராட்டம் நடைபெற்றதன் காரணமாக, பிரதமர் நரேந்திர மோடியின் வாகனங்கள் சுமார் 20 நிமிடங்கள் பயணிக்க முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டன. பிரதமரின் பாதுகாப்பு அலுவலர்கள் எங்கும் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டதோடு, கண்ணுக்கு எட்டிய தொலைவில் தனியார் கார்கள் பயணித்தது பாதுகாப்பில் ஏற்பட்ட மீறல் எனக் கருதப்படுகிறது.
இந்தக் காரணங்களுக்காக, பஞ்சாபின் பதிண்டா விமான நிலையத்திற்கு மீண்டும் திரும்பினார் பிரதமர் மோடி.
பஞ்சாப் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் இன்னும் சில தினங்களில் நடைபெற இருப்பதால், இந்த விவகாரம் மத்திய அரசுக்கும், காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநில அரசுக்கும் இடையிலான மோதலை அதிகரித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பஞ்சாப் முதல்வர் சரஞ்சித் சிங் சன்னியின் அரசு பிரதமரின் வருகைக்கு ஏற்றவாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. `ஒரு மேம்பாலத்தின் மீது சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பிரதமர் சிக்கிக் கொண்டார். இது பிரதமரின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட மிகப்பெரிய குறைபாடு’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பஞ்சாபின் ஃபிரோஸ்பூர் பகுதியில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி பஞ்சாப் வந்துள்ளார். எனினும், எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த விவகாரம் காரணமாக, இந்தப் பிரசாரக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.