"அறிவை பெற ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துங்க" மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் அட்வைஸ்!
புதிய கண்ணோட்டங்களுடன் புதிய சிந்தனைகளை கற்பித்தலில் இணைக்க வேண்டும் என ஆசிரியர்களை மாணவர்கள் கேட்டுக் கொள்ள வேண்டும் என மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவுறுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாணவர்களுடன் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று கலந்துரையாடினார். ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரால் நடத்தப்படும் இந்திய அரசின் பாரத தரிசனத் திட்டத்தின் கீழ் காஷ்மீர் மாணவர்கள் டெல்லிக்கு சென்றுள்ளனர்.
இவர்களின் தேடல், கூர்ந்து கவனிக்கும் திறன், நுண்ணறிவு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்கிக் கொள்ளவும், புதிய ஸ்டார்ட் அப் வழிகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில், குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், உயிர் வேதியியல், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி தொழில்நுட்பம் ஆகியவற்றில் புதிய முன்னேற்றங்களை அறிந்து கொள்ளவும் ஆலோசனை வழங்கினார்.
காஷ்மீர் மாணவர்களுடன் கலந்துரையாடிய மத்திய அமைச்சர்:
தகவல்களையும் அறிவையும் பெறுவதற்கு மாணவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் உட்பட மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றி அவர் பேசினார். இது அவர்களின் திறனை மேம்படுத்த உதவும் என்று அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும், அவை ஆப்பிள் விளைச்சலை இரட்டிப்பாக்கவும், ஆப்பிள்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவும் பணியாற்றி வருவதாக மத்திய அமைச்சர் மாணவர்களிடம் தெரிவித்தார்.
ஊதா புரட்சி பற்றி ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு அவர் விவரித்தார். அவர்கள் லாவெண்டர் பயிரிடுவது மட்டுமல்லாமல், அதிலிருந்து வாசனை திரவியம் மற்றும் எண்ணெயை வடிகட்டுவதன் மூலம் கைநிறைய சம்பாதிக்கிறார்கள் என்றும் கூறினார்.
"புதிய சிந்தனைகளை கற்பித்தலில் இணைக்க வேண்டும்"
புதிய கண்ணோட்டங்களுடன் தங்களை அணுகவும், புதிய சிந்தனைகளை தங்கள் கற்பித்தலில் இணைக்கவும் தங்கள் ஆசிரியர்களை மாணவர்கள் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று ஜிதேந்திர சிங் கேட்டுக் கொண்டார். மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு இதுபோன்ற பயிலரங்குகளை ஏற்பாடு செய்யுமாறு குழுவின் ஒரு பகுதியான ஜம்மு காஷ்மீர் காவல்துறை அதிகாரிகளையும் அவர் கேட்டுக்கொண்டார்.
அங்கு, ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் ஏழு அதிகாரிகளுடன் சுமார் 70 மாணவர்கள் இருந்தனர். அவர்களில் பாதிப்பேர் போரில் உயிர்த்தியாகம் செய்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இந்த மாணவர்கள் முதலில் பெங்களூருக்குச் சென்றனர். அங்கு அவர்கள் விஸ்வேஸ்வரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டனர்.
இந்த சுற்றுப்பயணம் அக்டோபர் 09 அன்று தொடங்கியது. அவர்கள் விமானத்தில் பயணித்து நாளை ஜம்மு காஷ்மீர் திரும்புவார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

