பணியிடத்தில் பாதுகாப்பு இல்லையா? இனி, கவலை வேண்டாம்.. பெண்களே தெரிஞ்சுக்கோங்க!
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களின் பதிவு மற்றும் கண்காணிப்பை ஒழுங்குபடுத்த SHe-Box தளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. குறிப்பாக, பணியிடத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் SHe-Box தளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலா?
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி தலைமையின் கீழ், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி, புதிய SHe-Box தளத்தை அறிமுகப்படுத்தியது.
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களின் பதிவு மற்றும் கண்காணிப்பை ஒழுங்குபடுத்த இந்த மையப்படுத்தப்பட்ட தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வில், அமைச்சகத்திற்கான புதிய வலைத்தளம் வெளியிடப்பட்டது.
இவை இரண்டும் பொதுமக்களுடன் அரசின் டிஜிட்டல் ஈடுபாட்டை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதும் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கான அரசின் தற்போதைய முயற்சிகளில் SHe-Box வலைதளம் ஒரு முக்கிய அங்கமாகும்.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முக்கிய நடவடிக்கை:
ஒரு மையப்படுத்தப்பட்ட களஞ்சியமாக செயல்படும் இந்தத் தளம் , அரசு மற்றும் தனியார் துறைகளில் உருவாக்கப்பட்ட உள் குழுக்கள் மற்றும் உள்ளூர் குழுக்கள் பற்றிய தகவல்களை சேமிக்கும். பெண்கள் புகார்களைத் தாக்கல் செய்வதற்கும், அவர்களின் நிலையை கண்காணிப்பதற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் புகார்கள் சரியான நேரத்தில் செயலாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் இது ஒரு ஒருங்கிணைந்த தளத்தை வழங்குகிறது.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி, தளத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பணியிட துன்புறுத்தல்களை எதிர்கொள்ள பெண்களுக்கு மிகவும் திறமையான மற்றும் பாதுகாப்பான முறையை இது வழங்கும் என்றும் அவர் கூறினார்.
"இந்த முயற்சி இந்தியா முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய பணிச்சூழலை உருவாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை மேலும் அதிகரிக்கிறது" என்று அவர் கூறினார். புகார்தாரர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கவும், தனிப்பட்ட தகவல்கள் ரகசியமாக இருப்பதை உறுதி செய்யவும் இந்தத் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
2047-ல் இந்தியா தனது நூற்றாண்டை எட்டும் வேளையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளித்து வருகிறது. அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் பெண்களின் முக்கிய பங்கை அங்கீகரித்து, பெண்கள் தொழிலாளர் தொகுப்பில் செழித்து வளர உதவும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.