என்னாது! சீனியர் சிட்டிசன்களுக்கு இத்தனை திட்டங்களா? இலவசமா.. பொழுதுபோக்கு வேற
ஏழ்மை நிலையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு உறைவிடம், ஊட்டச்சத்து, மருத்துவ சேவை மற்றும் பொழுதுபோக்கு போன்றவை இலவசமாக வழங்கப்படுகின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஓய்வூதிய காப்பீட்டு திட்டம் தொடங்கி உறைவிடம், ஊட்டச்சத்து, மருத்துவ சேவை, பொழுதுபோக்கு வரை மூத்த குடிமக்களுக்கு என பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் பி.எல். வர்மா தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதில் அளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் பி.எல். வர்மா, "மூத்த குடிமக்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பிரதமரின் மூத்த குடிமக்கள் ஓய்வூதிய காப்பீட்டு திட்டத்தை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் செயல்படுத்துகிறது.
மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள்:
ஒருங்கிணைந்த மூத்த குடிமக்கள் திட்டமானது முதியோர் இல்லங்கள், தொடர் பராமரிப்பு இல்லங்கள் போன்றவற்றை நடத்துவதற்கும் பராமரிப்பதற்கும் அரசு சாரா / தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மானிய உதவி வழங்குகிறது.
ஏழ்மை நிலையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு உறைவிடம், ஊட்டச்சத்து, மருத்துவ சேவை மற்றும் பொழுதுபோக்கு போன்றவை இலவசமாக வழங்கப்படுகின்றன.
வயது தொடர்பான குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு, மாத வருமானம் ரூ.15,000/-க்கு மிகாமல் உள்ள மூத்த குடிமக்களுக்கு, அவர்களின் உடல் செயல்பாடுகளை கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு கொண்டு வரக்கூடிய உடல் இயக்க உதவி சாதனங்கள் மற்றும் வாழ்க்கை உதவி சாதனங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ராஷ்டிரிய வயோஸ்ரீ திட்டத்தை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசு தகவல்:
இந்த திட்டம், 'செயற்கை உறுப்புகள் உற்பத்தி நிறுவனம் (அலிம்கோ)' என்ற மத்திய பொதுத்துறை நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. முதியோரின் பல்வேறு உடல்நலம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 2010-11-ம் ஆண்டில் முதியோர் சுகாதாரத்திற்கான தேசிய திட்டத்தை தொடங்கியது.
'சர்வதேச முதியோர் தினத்தை' குறிக்கும் வகையில், 2024 அக்டோபரில், மொத்தம் 44279 சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டு, 9,15,100 முதியவர்களுக்கு சுகாதார சேவைகள் வழங்கப்பட்டன. மேலும், நாடு முழுவதும் 3904 முதியோர் இல்லங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 33049 முதியோருக்கு சுகாதார சேவைகள் வழங்கப்பட்டுள்ளன" என்றார்.
இதையும் படிக்க: TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு