ஆந்திரா- ராஜஸ்தான் மாநிலங்களுக்கு உள்ளாட்சி நிதி விடுவிப்பு: எவ்வளவு தெரியுமா?
ஆந்திர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு 2024-25 நிதியாண்டுக்கான பதினைந்தாவது நிதிக்குழு மானியத்தின் முதல் தவணையை மத்திய அரசு விடுவித்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25 நிதியாண்டுக்கான பதினைந்தாவது நிதிக்குழு மானியத்தின் முதல் தவணையை மத்திய அரசு விடுவித்துள்ளது.
நிதி விடுவிப்பு:
ஆந்திரப் பிரதேசம் ரூ.395.5091 கோடி யூனிஃபைட் மானியத்தையும் ரூ .593.2639 கோடி டைட் மானியத்தையும் பெற்றுள்ளது. இந்திய அரசியலமைப்பின் பதினோராவது அட்டவணையின் கீழ் வேளாண்மை மற்றும் ஊரக வீட்டுவசதி முதல் கல்வி மற்றும் துப்புரவு வரை உள்ள 29 விஷயங்களில் குறிப்பிட்ட உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்ய பஞ்சாயத்துகளுக்கு யூனிஃபைட் மானியங்கள் உதவும். இருப்பினும், இந்த நிதியை சம்பளம் அல்லது நிறுவன செலவுகளுக்கு பயன்படுத்த முடியாது. டைட் மானியம் என்பது சுகாதாரம், திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலையை பராமரித்தல் உள்ளிட்ட தூய்மைப் பணிகள், மழைநீர் சேகரிப்பு, நீர் மறுசுழற்சி, வீட்டுக் கழிவுகளை சுத்திகரித்தல் உள்ளிட்ட நீர் மேலாண்மை போன்ற முக்கிய சேவைகளில் கவனம் செலுத்தும்.
பதினைந்தாவது நிதிக்குழு பரிந்துரை:
இந்த நிதி ஆந்திரப் பிரதேசத்தில் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான 9 மாவட்டப் பஞ்சாயத்துகள், தகுதியான 615 வட்டாரப் பஞ்சாயத்துகள் மற்றும் தகுதியான 12,853 கிராம பஞ்சாயத்துகளுக்கு உரியதாகும்.
ராஜஸ்தானில், முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான 22 மாவட்டப் பஞ்சாயத்துகள், தகுதியான 287 வட்டாரப் பஞ்சாயத்துகள் மற்றும் தகுதியான 9,068 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு ரூ .507.1177 கோடி யூனிஃபைட் மானியமும் ரூ .760.6769 கோடி டைட் மானியமும் விடுவிக்கப்பட்டுள்ளன.
மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், ஜல் சக்தி அமைச்சகம் (குடிநீர் மற்றும் துப்புரவு துறை) மூலம் மாநிலங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியத்தை விடுவிக்க பதினைந்தாவது நிதிக்குழு பரிந்துரைக்கிறது, பின்னர் அது நிதி அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. பரிந்துரைக்கப்பட்ட மானியம் ஒரு நிதியாண்டில் 2 தவணைகளில் வழங்கப்படுகிறது.