Budget 2023: விவசாயம் முதல் கிரிப்டோ வரை... மக்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள மத்திய பட்ஜெட்..!
முக்கிய துறைகளில் மானியம் அறிவித்து ஜிடிபி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என பல்வேறு துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
நாட்டின் வரவு செலவு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் ஆண்டுக்கு ஒரு முறை அறிக்கையாக தாக்கல் செய்வார். இதுவே, மத்திய பட்ஜெட் என அழைக்கப்படுகிறது.
பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட்:
அந்த வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தனது ஐந்தாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அப்போது, வரவிருக்கும் 2023-24 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைகள் மற்றும் வரி திட்டங்களை தாக்கல் செய்யப்படும்.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், இந்த அரசாங்கத்தின் கடைசி முழு ஆண்டு பட்ஜெட் இது என்பதால் இந்த பட்ஜெட் முக்கியத்துவம் பெறுகிறது. அதுமட்டுமின்றி, உலக பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையை எதிர்நோக்கியுள்ள நிலையில், இந்த பட்ஜெட்டுக்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
முக்கிய துறைகளில் மானியம் அறிவித்து ஜிடிபி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என பல்வேறு துறையினர் எதிர்பார்க்கின்றனர். அதேபோல, வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவது தனிநபர்களின் கோரிக்கையாக உள்ளது.
கிராமப்புற இந்தியா:
இதுகுறித்து மணிபாக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் தீபக் அகர்வால் கூறுகையில், "கிராமப்புற இந்தியாவில் வசிக்கும் 65% மக்கள்தொகை பெரும்பாலும் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளைச் சார்ந்து இருப்பதால், இந்தத் துறையின் வேகமான மற்றும் நிலையான வளர்ச்சியானது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு நீண்டகால தாக்கங்களைக் கொண்டிருக்கும்.
மத்திய பட்ஜெட் பற்றி பிற கட்டுரைகளை வாசிக்க: Union Budget : டிஜிட்டல் பண பரிவர்த்தனை முதல் ஜிஎஸ்டி வரை...மத்திய பட்ஜெட்டில் பிரதமர் மோடி அரசு மேற்கொண்ட முக்கிய மாற்றங்கள்...
ஜன் - தன் கணக்குகள், முத்ரா யோஜனா போன்ற கொள்கை திட்டங்கள் கடன் பெறுவதற்கான வசதியை அதிகப்படுத்தியுள்ளது. நாட்டின் தேசிய வருவாயில் பாதி பங்களிப்பை வழங்கினாலும், கிராமப்புற இந்தியா வங்கிக் கடனில் 9% பங்கை மட்டுமே பெற்றுள்ளதால் கூடுதல் உத்வேகம் தேவைப்படுகிறது" என்றார்.
கிரிப்டோ நாணயம்:
இதுபற்றி காயின்ஸ்விட்ச் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பேசுகையில், "கடந்த ஆண்டு, மத்திய பட்ஜெட் கிரிப்டோக்களை அங்கீகரிப்பதாக இருந்தபோதிலும், இந்த ஆண்டு அதை ஒழுங்குப்படுத்த வேண்டும். கிரிப்டோக்களைக் கண்டுபிடித்து வரி விதிக்கும் அரசாங்கத்தின் நோக்கத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். இருப்பினும், முற்போக்கான வரிவிதிப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது அவசியம்" என்றார்.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள்:
இதுகுறித்து அய்கார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தேபர்ஷி தத்தா விவரிக்கையில், "அரசாங்கம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. மேலும் இந்த முயற்சியை எளிதாக்குவதற்கும் துரிதப்படுத்துவதற்கும் 10,000 விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்புகளை (FPO) அமைக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.
மத்திய பட்ஜெட் பற்றி பிற கட்டுரைகளை வாசிக்க: Budget Interesting Facts: மத்திய பட்ஜெட்டின் வரலாற்று சிறப்பம்சங்கள்... பலர் அறிந்திராத தகவல்கள்... இதோ..!
இதற்கு நிதியுதவி உதவும் அதே வேளையில், இந்த FPOக்களை தொழில்ரீதியாக நிர்வகித்தல், தரவுகளை சேகரிப்பது, சந்தை இணைப்புகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முயற்சிகளை ஆதரிப்பது இந்த FPOகளின் தாக்கத்தை அதிவேகமாக வளர்க்க உதவும்" என்றார்.