Budget Interesting Facts: மத்திய பட்ஜெட்டின் வரலாற்று சிறப்பம்சங்கள்... பலர் அறிந்திராத தகவல்கள்... இதோ..!
Union Budget Interesting Facts: 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த அரசாங்கத்தின் கடைசி முழு ஆண்டு பட்ஜெட் இது என்பதால் இந்த பட்ஜெட் முக்கியத்துவம் பெறுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தனது ஐந்தாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அப்போது, வரவிருக்கும் 2023-24 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைகள் மற்றும் வரி திட்டங்களை தாக்கல் செய்யப்படும்.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், இந்த அரசாங்கத்தின் கடைசி முழு ஆண்டு பட்ஜெட் இது என்பதால் இந்த பட்ஜெட் முக்கியத்துவம் பெறுகிறது.
மத்திய பட்ஜெட்டின் வரலாற்று சிறப்புகள்:
இந்தியாவின் முதல் பட்ஜெட்:
கடந்த 1860ஆம் ஆண்டு, ஏப்ரல் 7ஆம் தேதி, கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த ஸ்காட்லாந்து பொருளாதார வல்லுநரும் அரசியல்வாதியுமான ஜேம்ஸ் வில்சன் இந்தியாவில் பட்ஜெட்டை முதல்முறையாக அறிமுகம் செய்தார்.
1947ஆம் ஆண்டு, நவம்பர் 26ஆம் தேதி, அப்போதைய மத்திய நிதியமைச்சர் ஆர். கே. சண்முகம் செட்டியால் சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
நீண்ட பட்ஜெட் உரை:
கடந்த 2020ஆம் ஆண்டு, பிப்ரவரி 1ஆம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2020-21 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கிட்டத்தட்ட 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பட்ஜெட் உரையை அவர் வாசித்தார். இதுவே, நீண்ட நேரம் ஆற்றப்பட்ட பட்ஜெட் உரையாகும்.
பட்ஜெட் உரையில் இரண்டு பக்கங்கள் மீதம் இருந்தபோதிலும், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பட்ஜெட் உரையை குறைக்க வேண்டியதாயிற்று. உரையில் எஞ்சிய பகுதியை படித்ததாக கருதுமாறு சபாநாயகரிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, 2019ஆம் ஆண்டு, ஜூலை மாதம், மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் ஆற்றிய முதல் பட்ஜெட் உரைதான் நீண்ட நேரம் ஆற்றப்பட்ட உரையாக இருந்தது. தன்னுடைய சாதனையை அவரே முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
அதிக சொற்கள் கொண்ட பட்ஜெட் உரை:
1991 ஆம் ஆண்டு, நரசிம்மராவ் அரசாங்கத்தில் நிதியமைச்சராக பொறுப்பு வகித்த மன்மோகன் சிங்தான் சொற்களின் அடிப்படையில் மிக நீண்ட பட்ஜெட் உரையை ஆற்றினார். அந்த பட்ஜெட்டில், 18,650 சொற்கள் இடம்பெற்றிருந்தது.
2018 ஆம் ஆண்டில், அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் 18,604 சொற்கள் கொண்ட பட்ஜெட், சொற்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இரண்டாவது மிக நீண்ட பட்ஜெட் ஆகும். அதை வாசிக்க, ஜெட்லி 1 மணி நேரம் 49 நிமிடங்கள் எடுத்து கொண்டார்.
மிக குறுகிய பட்ஜெட் உரை:
1977ஆம் ஆண்டு, நிதியமைச்சர் ஹிருபாய் முல்ஜிபாய் படேல் வழங்கிய பட்ஜெட்தான் இந்தியாவின் மிக குறுகிய பட்ஜெட் ஆகும். அந்த பட்ஜெட் உரையில், 800 சொற்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது.
அதிக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர்கள்:
முன்னாள் பிரதமர் மொராஜி தேசாய், நாட்டின் வரலாற்றிலேயே அதிக பட்ஜெட்களை தாக்கல் செய்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
1962ஆம் ஆண்டு முதல் 69ஆம் ஆண்டு வரையில், நிதியமைச்சராக பொறுப்பு வகித்தபோது 10 பட்ஜெட்டுகளை அவர் தாக்கல் செய்தார், அதைத் தொடர்ந்து ப. சிதம்பரம் (9), பிரணாப் முகர்ஜி (8), யஷ்வந்த் சின்ஹா (8) மன்மோகன் சிங் (6) ஆகியோர் அதிக பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த அமைச்சர்கள் ஆவர்.