U.U. Lalit: உச்ச நீதிமன்ற புதிய நீதிபதி யு.யு.லலித் விசாரிக்கும் முதல் வழக்கு இதுதான்!
U.U. Lalit: உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்ற பின்னர் விசாரிக்கும் முதலில், அரசியல் சாசனத்தில் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய முக்கிய வழக்குகளை தேர்வு செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள யு.யு.லலித், விசாரிக்கும் முதல் வழக்காக, பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் உயர் சாதி வகுப்பினருக்கான 10% இடஒதுகீட்டு வழக்கினை விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அதைத் தொடர்ந்து, ஆந்திராவில் கல்வி நிலையங்களில் இஸ்லாமியருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு ஆந்திர மாநில அரசால் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை விசாரிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், வழக்கை எப்படி மேலாண்மை செய்யலாம் என செப்டம்பர் மாதம் 6ம் தேதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா ஓய்வு பெற்றதையடுத்து,அவருக்கு அடுத்த தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 27ம் தேதி (27/08/2022) இவருக்கு குடியரசுத் தலைவர் த்ரௌபதி முர்மு பதவி பிரமானம் செய்து வைத்தார்.
அதில் பதவி பிராமனம் எடுத்து கொண்ட யு.யு.லலித் இந்தியாவின் 49வது தலைமை நீதிபதியாக பணியாற்ற உள்ளார். இவருடைய பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் 8ஆம் தேதி வரை மட்டுமே இருக்கும். இவர் 74 நாட்கள் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள யு.யு. லலித் மூத்த நீதிபதியாக இருந்த போது காலை 7 மணிக்கே மாணவர்கள் பள்ளி செல்லும்போது காலை 9 மணிக்கு நீதிபதிகள் பணிக்கு வர முடியாதா என்று சக நீதிபதிகளை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1957ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் சோலாபூரில் பிறந்த யு.யு.லலித், தனது 27வது வயதில் 1983 ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். இவர் 2014 ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட யு.யு.லலித், 2ஜி வழக்கில் அரசுதரப்பு வழக்கறிஞராக ஆஜராகி வாதிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவிற்கு நேற்று பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. அதில் தலைமை நீதிபதியாக தேர்வாகியிருந்த யுயு லலித் சிறப்பு உரையாற்றினார். அந்த உரையில் அவர் உச்சநீதிமன்றத்தில் கொண்டு வர உள்ள மாற்றங்கள் தொடர்பாக பேசினார். அதன்படி அவர் உச்சநீதிமன்றத்தில் 3 விஷயங்களில் அதிக கவனம் செலுத்த உள்ளதாக கூறியுள்ளார்.
இவர் ஏற்கனவே, வழக்குகளை பட்டியலிடுவதில் கூடுதல் வெளிப்படை தன்மை கொண்டு வர உள்ளதாக கூறினார். இரண்டாவதாக அவசர வழக்குகள் தொடர்பாக உடனடியாக முறையிட ஒரு வழி உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். இவை தவிர உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து செயல்படும் வகையில் வழி வகுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும் அவர், “உச்சநீதிமன்றத்தின் முக்கியமான பங்கு ஒரு சட்டம் அல்லது தீர்ப்பை மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கும்படி அளிக்க வேண்டும் என்பது தான். அதை செய்ய அதிகமான நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வை உடனடியாக உருவாக்க வேண்டும். அப்போது இந்த விவகாரங்களில் உள்ள குழப்பங்கள் தெளிவு பெற்று தெளிவான தீர்ப்பை அளிக்க முடியும்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.