Pet Dog Rules: இனிமே ரெண்டு நாய்கள்தான் வளர்க்க முடியும்! இனிமே லைசென்ஸ் அவசியம்?.. புது ரூல்ஸ்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சியில் வீட்டிற்கு இரண்டு நாய்களை மட்டுமே, வளர்க்க அனுமதிக்கும் புதிய திட்டம் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் நாய் தொல்லை:
கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் தொல்லை கடுமையாக அதிகரித்துள்ளதோடு, அவற்றால் கடிக்கப்பட்டு பெரியவர், சிறியவர் என நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை, தெருநாய்கள் விரட்டி விரட்டி கடிக்கும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அத்தகைய சில சம்பவங்கள் நெஞ்சை பதறவைக்கும் விதமாகவும் உள்ளன. இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு, கேரளாவில் தெரு நாய்கள் தொல்லை கடுமையாக அதிகரித்துவிட்டதால், அதைக் கட்டுப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாய்களுக்கு மட்டுமே அனுமதி:
இந்நிலையில் தான், நாய்கள் தொல்லை மற்றும் அதனால் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில், கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாநகராட்சியில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வணிக நோக்கத்திற்காக அல்லாத பட்சத்தில் ஒரு வீட்டில் இரண்டுக்கும் அதிகமான நாய்களை வளர்க்கக் கூடாது என, மாநகராட்சி அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுகாதார நிலைக்குழு கொண்டு வந்த இந்த தீர்மானத்தில், வீடுகளில் அதிக நாய்கள் இருப்பது அக்கம் பக்கதில் வசிப்பவர்களுக்கு மோசமான சூழலை ஏற்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய அம்சம் என்ன?
ஏற்கனவே ஒரு வீட்டில் 2 நாய்களை மட்டுமே வளர்க்க அனுமதித்து இருந்த நிலையில், கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 5 ஆக உயர்த்தி அனுமதிக்கப்பட்டது. தற்போது அந்த எண்ணிக்கை மீண்டும் 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், 2 ஐ விட கூடுதல் எண்ணிக்கையிலான நாய்களை வளர்க்க, சிறப்பு அனுமதி பெற வேண்டும். வளர்ப்பு நாய்களுக்காக ஒவ்வொரு அண்டும் சிறப்பு கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும், வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மாநில அரசுக்கு அனுப்பப்பட்டு, ஒப்புதல் கிடைத்ததும் அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தனித்தனியாக லைசென்ஸ்:
”உரிய அனுமதி மற்றும் போதிய வசதிகள் இன்றி வீடுகளில் நாய்கள் வளர்க்கப்படுவதால், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் நோக்கில், இனிமேல் யாரேனும் இரண்டுக்கும் மேலாக கூடுதல் நாய்களை வளர்க்க விரும்பினால், ஒவ்வொரு நாய்க்கும் தனித்தனியாக உரிமம் பெற வேண்டும்” என சுகாதார நிலைக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண விவரம்:
பெரிய இனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1000, சிறிய இனங்களுக்கு ரூ.500 மற்றும் நடுத்தர இனங்களுக்கு ரூ.750 என புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு அனைத்து இனங்களுக்கும் ஒரே மாதிரியாக ஆண்டிற்கு ரூ.125 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. காப்பக மாதிரியில் நாய்களை வளர்ப்பவர்கள், ஆண்டிற்கு ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும். கடந்த ஆண்டில் ரூ.125 கட்டணத்தில், 9,000-க்கும் அதிகமான வளர்ப்பு நாய்களுக்கான உரிமத்தை திருவனந்தபுரம் மாநகராட்சி வழங்கியுள்ளது. தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள கட்டணத்தின் மூலம், மாநகராட்சி நிர்வாகத்திற்கு கூடுதல் வருவாயுடன், நாய்களை சிறப்பாக கண்காணிக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.