Top 10 News: இந்திக்கு மாறிய எல்ஐசி இணையதளம், நீதிமன்றத்தில் ஆஜரான எடப்பாடி பழனிசாமி - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜர்
அதிமுக ஆட்சிக் காலத்தில் சுமார் 690 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக, அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது. இதையடுத்து பொய்யான தகவல்களை பரப்புவதாக அறப்போர் இயக்கத்திடம் ரூ.1.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். அதுதொடர்பான விசாரணைக்கான சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள, மாஸ்டர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார்.
தவெக உடன் கூட்டணி? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக தலைமையை ஏற்று வரும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி, அமைக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் உள்ளதாகவும், ஊடக செய்திகளின் அடிப்படையில் தவெக தரப்பு மறுப்பு தெரிவித்து உள்ளதாகவும் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
மீண்டும் எகிறிய தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து 56 ஆயிரத்து 520 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை 70 ரூபாய் அதிகரித்து, 7 ஆயிரத்து 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மருத்துவர் பாலாஜி டிஸ்சார்ஜ்:
சென்னையில் கடந்த வாரம் கத்திக்குத்தால் காயமடைந்த மருத்துவர் பாலாஜி, கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். சில நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தல்.
அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி, வரும் 24ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளது. வக்பு சட்ட திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வரும்நிலையில், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
தர்காவில் ராம்சரண்
ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள புகழ்பெற்ற அமீன்பீர் பெரிய தர்காவில் நடைபெற்ற 80வது தேசிய முஷைரா கஜல் நிகழ்ச்சியில் நடிகர் ராம் சரண் பங்கேற்பு. 3 மாதங்களுக்கு முன்பே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் அழைப்பை ஏற்றிருந்த நிலையில், தற்போது சபரிமலைக்கு மாலை அணிந்து வருகை புரிந்துள்ளார். இவரின் வருகையை அறிந்து கடப்பா நகரம் முழுவதும் ரசிகர்கள் பெருமளவில் திரண்டு அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
இந்திக்கு மாறிய எல்ஐசி இணையதளம்
இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் இணையதளம், முழுவதுமாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டுள்ளது. மொழி என குறிப்பிடப்பட்டுள்ள இந்தி எனும் வார்த்தையை கிளிக் செய்தால் மட்டுமே, ஆங்கிலத்திற்கு மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராணுவம், தீவிரவாதிகள் இடையே மோதல் - 17 பேர் பலி
பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தின் திரக் மைதான் பகுதியில் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் பதுங்கியிருந்தனர். அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவத்தினரை நோக்கி அவர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால், இரு தரப்பிற்கும் இடையே நடந்த மோதலில் பாதுகாப்புப்படையினர் 8 பேர், பயங்கரவாதிகள் 9 பேர் என மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர்.
இந்திய அணி அறிவிப்பு:
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான, இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வரும் 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை, 3 போட்டிகளில் இந்திய அணி விளையாட யுள்ளது. ஹர்மன்ப்ரித் கவுர் தலைமையிலான அணியில் 16 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.
ஓராண்டு நிறைவு
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியடைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. உள்ளூரிலேயே நடைபெற்ற உலகக் கோப்பையில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்த இந்த நாளை குறிப்பிட்டு ரசிகர்கள் இணையத்தில் வேதனையை பகிர்ந்து வருகின்றனர்.