Top 10 News: 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1000, எலான் மஸ்கிற்கு பொறுப்பு - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
தமிழ்நாட்டில் மழை தொடரும்
வடதமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நீடிக்கிறது. இதனால் சென்னையில் மழை தொடரும் எனவும், தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சரிந்த தங்கம் விலை - பொதுமக்கள் மகிழ்ச்சி:
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 40 ரூபாய் சரிந்து, 7 ஆயிரத்து 45 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளி விலை ஒரு ரூபாய் அதிகரித்து 101 ரூபாயாக உள்ளது.
9ம் வகுப்பு மாணவர்களுக்கு நல்வாய்ப்பு
2024-2025 ஆம் கல்வியாண்டில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவ / மாணவியர்கள் 2024 டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி ( சனிக்கிழமை )நடைபெறவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு (TRUST) விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு வரை தொடர்ந்து படிக்கும் காலத்திற்கு படிப்புதவித் தொகை ஆண்டு தோறும் ரூ.1000 வீதம் வழங்கப்படும்.
40 கிலோ கஞ்சா பறிமுதல்
தமிழ்நாடு - ஆந்திர எல்லைப்பகுதியான எளாவூர் சோதனைச்சாவடியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த சந்தோஷ் நாய்க், கேரளாவை சேர்ந்த மித்தில்லா, கும்பகோணத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி ஆகிய மூவர் கைதாகியுள்ளனர். ஆவடி காவல் ஆய்வாளர் ராம்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடவடிக்கை என தகவல்.
ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு தீவிரம்
ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில், 43 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 609 ஆண்கள், 73 பெண்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 683 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 1.37 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது.
வயநாடு இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு
வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடியை பார்வையிட்டார். 14.71 லட்சம் வாக்காளர்களை கொண்ட வயநாடு தொகுதியில் 17 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் முகேரி போட்டியிடுகின்றனர்.
ஆர்பிஐ வரம்பை கடந்த சில்லறை பணவீக்கம்
அக்டோபர் மாதத்திற்கான நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் 6.21 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 5.49 சதவீதமாக இருந்த சில்லறை வர்த்தக பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் அதிகரித்துள்ளது. இது கடந்த 14 மாதங்களில் இல்லாத பணவீக்க உயர்வாகும். நாட்டின் சில்லறை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு வரம்பை தாண்டி கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
ட்ரம்ப் ஆட்சியில் எலான் மஸ்கிற்கு பொறுப்பு
அமெரிக்க அதிபராக டொனல்ட் ட்ரம்ப் பொறுப்பேற்றபின், செயல்திறன் துறையை (DOGE) தலைமை தாங்கி வழிநடத்த தொழிலதிபர் எலன் மஸ்க், இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி கூட்டாக நியமிக்கப்பட்டுள்ளனர். செயல்திறன் துறை (DOGE) இன்னும் அதிகாரப்பூர்வ அரசாங்க நிறுவனமாக அங்கீகரிக்கப்படாத நிலையில், இவர்கள் நியமனம் உட்கட்டமைப்பில் முக்கிய சீர்திருத்தங்களை கொண்டுவரும் என நம்புவதாக ட்ரம்ப் விளக்கம்.
இந்தியா - தென்னாப்ரிக்கா மோதல்
இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி, செஞ்சூரியன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 4 போட்டிகள் கொண்ட தொடரில், இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில், தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.
பெங்களூர் அணியில் கே.எல்.ராகுல்?
ஐபிஎல் 2025 சீசனில் சென்னை அல்லது பெங்களூர் அணியில் விளையாட விரும்புவதாக, இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் விருப்பம் தெரிவித்துள்ளார். மேற்குறிப்பிட்ட அணிகள் வீரர்களை தங்களது குடும்பமாக கருதுவதாகவும் பாராட்டியுள்ளார்.