Top 10 News: சீமான் மீது குவியும் வழக்குகள், மன்னிப்பு கோரிய பவன் கல்யாண் - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
சீமான் மீது 60 வழக்குகள்
பெரியார் பற்றி அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சிமான் மீது, 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர், தென்காசி, சேலம், மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் புகாரின் அடிப்படையில் 60 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. திமுக மற்றும் விசிக போன்ற கட்சிகள் சீமான் பேச்சை கடுமையாக சாடி வருவது குறிப்பிடத்தக்கது.
கிரிமினல் உத்தியில் சங்பரிவார்கள் - திருமாவளவன்
பெரியார் மீதான நன்மதிப்பை நொறுக்கிட வேண்டும் என்கிற கிரிமினல் உத்தியில் சங் பரிவார்கள் நேரடியாக மட்டுமின்றி, மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் மீது பலமுனை தாக்குதலைத் தொடுத்திருக்கும் சனாதன ஃபாசிச சக்திகளையும் அவர்களுக்கு துணைபோகும் பிற்போக்கு சக்திகளையும் அடையாளம் கண்டு அம்பலப்படுத்துவோம் -விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை
வடகலை - தென்கலை பிரிவினர் இடையே தகராறு
காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில், பிரபந்தம் பாடுவதில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே தகராறு. தென்கலை பிரிவினர் முதலில் பாடியதற்கு, வடகலை பிரிவினர் எதிர்ப்பு. காவல்துறை, கோயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பையும் பாட அனுமதித்தனர். அதற்குப் பின்னரும் பிரச்னை செய்தவர்களை கோயிலில் இருந்து வெளியேற்றினர்.
அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
சென்னை ஐ.எசி.எப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ‘அம்ரித் பாரத்’ ரயில் பெட்டிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார். தொடர்ந்து பேசுகையில், “நாடு முழுவதும் 10,000 ரயில் எஞ்சின்களில் ‘கவாச்’ தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. ‘அம்ரித் பாரத்’ ரயில் பெட்டிகளில், பயணிகளின் வசதிக்காக அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.
மன்னிப்புக் கோரிய பவன் கல்யாண்
திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்காக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மன்னிப்பு கோரினார். அறிக்கையில், “கோயில் நிர்வாகிகளே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். பக்தர்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் கூடாது. கூட்டத்தை நிர்வகிப்பதில் உடனடியாக சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்
சபரிமலையில் குவியும் மக்கள்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம். இருமுடி கட்டிக்கொண்டு ஐயப்பனை தரிசிப்பதற்காக வெகு நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் கூட்டம் அலைமோதுகிறது.
குழந்தை பெற்றால் ரூ.81,000 பரிசு
ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்கும் 25 வயதுக்கு உட்பட்ட தாய்மார்களுக்கு ரூ81,000 வழங்கப்படும் என ரஷ்ய அரசு அறிவிப்பு. குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக சீனா, ஜப்பான், தென்கொரிய நாடுகளைத் தொடர்ந்து ரஷ்யாவும் இத்தகைய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. உதவித்தொகை பெறுபவர்கள் பல்கலைக்கழகத்தில் முழுநேர மாணவியாக இருக்க வேண்டும் என நிபந்தனை. 2வது குழந்தை பெற்றால் ரூ.8,130 வழங்கப்படுகிறது.
விற்பனைக்கு வரும் BREAKING BAD வீடு.. காரணம் என்ன?
பிரேக்கிங் பேட் தொடரில் வரும் வால்டர் என்ற கதாபாத்திரத்தின் வீட்டை ரூ.34 கோடிக்கு விற்க அதன் உரிமையாளர் முடிவு செய்துள்ளார். இந்த வீட்டைக் காண நாள்தோறும் அதிகப்படியான ரசிகர்கள் படையெடுப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார். 'இதை அருங்காட்சியகமாகவோ, சுற்றுலா தலமாகவோ மாற்றிக்கொள்ளட்டும். இங்கிருந்து சிறந்த நினைவுகளையே எடுத்துச்செல்ல விரும்புகிறோம்' என உரிமையாளர் குயிட்டனா விளக்கம்.
கவுண்டி கிரிக்கெட்டில் கோலி?
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சொதப்பிய விராட் கோலி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக அங்குள்ள சூழ்நிலைகளுக்கு தயாராகும் பொருட்டு அங்கு நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய வீரர் பிரனாய் தோல்வி
மலேசிய ஓபன் பேட்மிண்டனில் தொடரின் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் பிரனாய், சீன வீரர் லீ ஷி பெங்கை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-8, 15-21, 23-21 என்ற செட் கணக்கில் லீ ஷி பெங் வெற்றி பெற்றார். இதனால் பிரனாய் தொடரிலிருந்து வெளியேறினார் .