Tirupati Laddu: லட்டு சர்ச்சை! திருப்பதியில் தோஷத்தைப் போக்க தொடங்கியது சாந்தி ஹோமம்!
திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து திருப்பதி கோயிலில் சாந்தி ஹோமம் நடைபெறுகிறது.
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். திருப்பதி கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான லட்டு தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சாந்தி ஹோமம்:
இந்த நிலையில், கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி பிரசாதமான லட்டில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆய்வக பரிசோதனையிலும் அது உறுதி செய்யப்பட்ட நிலையில் தேவஸ்தான போர்டும் அதை ஒப்புக்கொண்டது. இது ஒட்டுமொத்த பக்தர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், புகழ்பெற்ற வைணவத் தலமான திருப்பதியின் புனிதத்தன்மையை மீட்டெடுப்பதற்காக சாந்தி ஹோமம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இன்று காலை 6 மணிக்கு திருப்பதியில் சாந்தி ஹோமம் தொடங்கியது. இந்த ஹோமம் வரும் 10 மணி வரை நடைபெறும்.
பரிகாரம்:
திருப்பதி லட்டு விவகாரத்தில் தங்களுக்கு எந்த தொடர்பு இல்லை என கடந்த முறை ஆட்சி செய்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம், திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யில் மீன் எண்ணெய். சோயா பீன்ஸ் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றுடன் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு ஆகியவை பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஆய்வக அறிக்கைகள் வெளியானது.
இதன் காரணமாக இந்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு ஆன்மீக ரீதியாகவும், அரசு ரீதியாகவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் ஆன்மீக ரீதியாக லட்டு விவகாரம் காரணமாக திருப்பதியில் தோஷம் எழுந்ததாக கருதப்படுவதால், அந்த தோஷத்தை போக்குவதற்காக திருப்பதியில் சாந்தி ஹோமம் நடத்தப்படும் என்று சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
பவன் கல்யாண் விரதம்:
இதன்படி, இன்று காலை திருப்பதியில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் சாந்தி ஹோமம் காலை 6 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெருமாளுக்கு குறிப்பாக திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்த ரோகிணி நட்சத்திரம் கொண்ட திங்கட்கிழமையில் இந்த சாந்தி ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஹோமமானது காலை 10 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த மகா சாந்தி ஹோமத்தில் புகழ்பெற்ற வேத வல்லுனர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். இந்த லட்டு விவகாரம் காரணமாக திருப்பதியில் புனிதத்தன்மை கெட்டுவிட்டதாக கூறி அந்த மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் 11 நாட்கள் விரதம் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.