எல்லைக்காக சண்டையிடும் புலிகள்.. புலிகளோடு சண்டையிடும் சிறுத்தைகள்.. ஆச்சர்யத்தில் சுற்றுலா பயணிகள்!
ராஜஸ்தானில் உள்ள ரந்தம்பூர் தேசிய பூங்காவில் வாழும் புலிகளுக்கு இடையில் எல்லைக்கான சண்டை ஏற்படுவது வழக்கம். சமீபத்தில் இவ்வாறான புலிகளுக்கு இடையிலான எல்லைச் சண்டையில் புலி ஒன்று படுகாயம் அடைந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரந்தம்பூர் தேசிய பூங்காவில் வாழும் புலிகளுக்கு இடையில் எல்லைக்கான சண்டைகள் ஏற்படுவது வழக்கம். சமீபத்தில் இவ்வாறான புலிகளுக்கு இடையிலான எல்லைச் சண்டை காரணமாக புலி ஒன்று படுகாயம் அடைந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரந்தம்பூர் தேசிய பூங்காவில் புலிகளின் வாழ்விடத்திற்கான நிலப்பகுதியை விட புலிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாலும், அந்தப் பகுதியில் பெண் புலிகளின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதாலும், அடிக்கடி புலிகளிடையே மோதல்கள் நிகழ்கின்றன. இந்த முறை ரந்தம்பூர் தேசிய பூங்காவில் புலிகளுக்கு இடையிலான மோதலில் T-120 என்ற புலி காயம் அடைந்துள்ளது அங்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர் எடுத்த படங்களின் மூலமாகத் தெரிய வந்துள்ளது.
T-120 என்ற இந்தப் பெண் புலி தன் காயங்களை நாவால் நக்கி சிகிச்சை அளித்துக் கொண்டாலும், காயம் ஏற்பட்டிருக்கும் பகுதியில் அதன் நாக்கு எட்டாது என்பதால் ரந்தம்பூரில் உள்ள வனப் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை கொண்டுள்ளனர். T-120 புலியைத் தாக்கிய புலி எது, இந்த மோதல் எப்போது நிகழ்ந்தது முதலான கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தாலும், அதுகுறித்த தகவல்கள் எதுவும் வனத்துறையிடம் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இந்த எல்லைச் சண்டை நிகழ்ந்ததாக யூகிக்கப்படும் இடத்தில் T-121, T-101, T-123 ஆகிய புலிகளின் நடமாட்டம் இருப்பதால், அங்கிருந்த T-121 புலியோடு மோதியதில் T-120 புலி காயம் அடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
T-120 புலி காயமடைந்திருக்கும் நிலையில், இதே ரந்தம்பூர் தேசிய பூங்காவில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ரந்தம்பூர் பூங்காவின் `Zone 2' பகுதியில் புலிகள் சபாரி பயணத்தில் சென்ற சுற்றுலா பயணிகள் இன்று சிறுத்தை ஒன்று புலியோடு சண்டையிடுவதைக் கண்டு பலரும் வீடியோ எடுத்து பதிவேற்றியதில் அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
T-101 என்ற புலிக்கும், சிறுத்தை ஒன்றிற்கும் இந்தச் சண்டை நிகழ்ந்துள்ளது. புலியுடன் மோத சவால் விட்ட சிறுத்தை அதனுடன் கடுமையான மோதலுக்குப் பிறகு சரணடையும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புலியும், சிறுத்தையும் சண்டையிட்டுக் கொள்வதை சுற்றுலா பயணிகள் கண்டு ஆச்சர்யமடைந்தனர்.
ரந்தம்பூர் தேசிய பூங்காவில் புலிகளின் வாழ்விடத்தின் எல்லைப் பிரச்னைகள் இருப்பதோடு, அங்குள்ள புலிகளுக்கும் சிறுத்தைகளுக்கும் இடையிலான மோதல்களும் அதிகரித்து வருகின்றன. சுமார் 80 புலிகள், நூற்றுக்கும் அதிகமான சிறுத்தைகள் ஆகிய விலங்குகள் ரந்தம்பூர் தேசிய பூங்காவில் வாழ்ந்து வருகின்றன.
தற்போது ராஜஸ்தானில் உள்ள இந்தப் பூங்காவில் சுற்றுலா காலமாக இருப்பதால், சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.