Dalai Lama Apologises: ”விளையாட்டாக செய்தேன்”.. சிறுவனுக்கு முத்தமிட்ட விவகாரத்தில் மன்னிப்பு கோரிய தலாய் லாமா
சிறுவனுக்கு முத்தமிட்ட விவகாரம் சர்ச்சை ஆன நிலையில், மதகுரு தலாய் லாமா பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
சிறுவனுக்கு முத்தமிட்ட விவகாரம் சர்ச்சை ஆன நிலையில், மதகுரு தலாய் லாமா பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். அதோடு விளையாட்டுத்தனமாகவே அந்த செயலில் ஈடுபட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.
மன்னிப்பு கோரிய தலாய் லாமா:
தலாய் லாமா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “சமீபத்தில் ஒரு சிறுவன் தலாய் லாமாவிடம் தன்னை கட்டிப்பிடிக்க முடியுமா என்று கேட்பதை போன்ற வீடியோ ஒன்று பரவி வருகிறது. தனது வார்த்தைகள் காயத்தை ஏற்படுத்தி இருந்தால், அந்த சிறுவன், அவனது குடும்பத்தினர் மற்றும் உலகெங்கிலும் உள்ள அவனது பல நண்பர்களிடமும், தலாய் லாமா மன்னிப்பு கேட்க விரும்புகிறார். தன்னை சந்திக்கும் நபர்களை ஒரு அப்பாவி மற்றும் விளையாட்டுத்தனமான முறையில் அடிக்கடி கிண்டல் செய்வது வழக்கம். பொது இடங்களிலும் கேமராக்களுக்கு முன்பும் கூட அவர் அப்படி தான் நடந்து கொள்வார். ஆனாலும், தற்போது நடந்த சம்பவத்திற்கு வருந்துகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
தலாய் லாமா வீடியோ:
எங்கு, அப்போது எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படாமல் சம்பவம் தொடர்பான வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அதில், மேடையில் அமர்ந்து இருக்கும் தலாய் லாமாவிற்கு மரியாதை செலுத்துவதற்காக மேலே வந்துள்ளார். அப்போது அருகே வந்த சிறுவனை பிடித்து உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த அனைவரும் சிரித்துள்ளனர். அதைதொடர்ந்து சில விநாடிகளுக்குப் பிறகு வாயிலிருந்து தனது நாக்கை வெளியே நீட்டிய தலாய் லாமா, அதனை முத்தமிடுமாறு தலாய் லாமா வலியுறுத்தியுள்ளார். முதலில் ஆட்சேபனை தெரிவிக்கும் விதமாக சிறுவன் பின்னே சென்றுள்ளான். ஆனால், தலாய் லாமா அவனது கையை பிடித்து இருந்ததால், தலாய் லாமாவின் நாக்கில் முத்தமிட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளான்.
குவியும் கண்டனங்கள்:
இதுதொடர்பான வீடியோ தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தலாய் லாமா செய்தது அத்துமீறல் என ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வர, மற்றொரு தரப்பினரோ தலாய் லாமா விளையாட்டாகவே சிறுவனுக்கு முத்தமிட்டார் என நியாயப்படுத்தி வருகின்றனர்.
தொடரும் சர்ச்சை:
தலாய் லாமா சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த 2019 ஆம் ஆண்டில், "கவர்ச்சிகரமானதாக" இருக்க வேண்டும் என்று கூறி, ஒரு பெண் தோற்றத்தைப் பற்றி கூறிய கருத்திற்கு உலகம் முழுவதும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. தலாய் லாமாவின் கருத்துக்கள் "பாலியல் சார்ந்தவை" என்று பரவலாக விமர்சிக்கப்பட்டதை அடுத்து, தலாய் லாமா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார்.அதைதொடர்ந்து, இரண்டாவது முறையாக மீண்டும் தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்தியாவில் தலாய் லாமா:
சீனாவில் அரசுக்கு எதிராக நடைபெற்ற கலகத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் தலாய் லாமா, தௌலாதார் மலைத்தொடரில் அமைந்துள்ள புத்த மடத்தை விட்டு இந்தியாவின் தர்மசாலாவில் குடியேறி ஏறத்தாழ 60 ஆண்டுகள் ஆகிவிட்டன.