Danish Siddiqui | டேனிஷ் சித்திக் மரணத்திற்கு நாங்கள் காரணம் இல்லை; சாரி சொல்லி மறுத்த தாலிபன்கள்..!
எந்தவொரு பத்திரிக்கையாளரும் யுத்தக்களத்தில் செய்திகளை பதிவுசெய்ய வருகிறார்கள் என்றால் எங்களுக்கு தெரிவிக்கவேண்டும். அப்படி முன்கூட்டியே தெரிவித்திருந்தால் நாங்கள் சரியான முறையில் கவனித்து இருப்போம்.
ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும் தாலிபன் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலின்போது உயிரிழந்த ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் மூத்த புகைப்படப் பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக் மரணத்திற்கு நாங்கள் வருத்துகிறோம் எனவும் இதற்கு நாங்கள் காரணம் இல்லை என தாலிபன்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதோடு இரங்கல் தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவின் மிகவும் பிரபலமான புகைப்படச் செய்தியாளர் டேனிஷ் சித்திக். பிரபல செய்தி நிறுவனமான ராய்டர்ஸில் தற்போது பணியாற்றி வந்தார். இவரது புகைப்படங்களின் வாயிலாகவே மக்கள் படும் இன்னல்களை உலகிற்கு எடுத்துக்கூறியவர். குறிப்பாக இந்தியாவில் கோரத்தாண்டம் ஆடிய கொரோனா தொற்றின் பாதிப்புகளை உலகறியச் செய்ததில் இவரின் பங்கு முக்கியமானது. கொரோனா தொற்றினால் ஆயிரக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்த நிலையில் சுடுகாட்டில் வைத்து எரித்தப் புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு அச்சத்தினையும் ஏற்படுத்தியது. மேலும் அரசுத் தரப்பு அலட்சியங்களையும், ஆக்சிஜன் பற்றாக்குறை, அவலங்கள் என பல உண்மைகளை தனது புகைப்படங்கள் மூலம் உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர் டேனிஷ் சித்திக். உத்தரப் பிரதேசத்தின் கங்கை நதியில் அருகே சடலங்கள் கொத்துகொத்தாக எரிக்கப்படுவதை கழுகு பார்வையில் இருந்து இவர் எடுத்த புகைப்படங்கள் இந்தியாவின் மோசமான நிலையை உலகம் முழுவதும் எடுத்துக்காட்டியது. இதோடு மட்டுமின்றி விவசாயிகளின் போராட்டத்தினையும் தன் புகைப்படங்கள் வாயிலாக அறியச்செய்தவர். இப்படி இவருடைய புகைப்படங்கள் மக்களின் பிரச்சனைகளை கண்முன்னே கொண்டுவரச்செய்த நிலையில் தான் இவருக்கு புலிட்சர் விருதும் வழங்கப்பட்டிருந்தது.
இப்படிப்பட்ட சிறந்த புகைப்பட செய்தியாளரான டேனிஷ் சித்திக், கடந்த சில தினங்களாக தீவிரம் அடைந்த தலிபான்கள் தாக்குதல் தொடர்பான செய்தியினை எடுப்பதற்கான ஆப்கானிஸ்தான் சென்றிருந்தார். அங்கேயே தங்கி தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்த புகைப்படங்களை எடுக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தார். குறிப்பாக ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பாக கடந்த சில தினங்களாக ஆப்கானில் தாலிபன்கள் முன்னேறி வருவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து தொடர்ந்து செய்திகளாக வெளியிட்டு வந்தார். குறிப்பாக, கந்தகாரில் தலிபான் படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதை அவர் மிகவும் நெருக்கமாக படம்பிடித்து இருந்தார்.அப்பொழுதுதான், ஆப்கான் ராணுவ படைகளுக்கும், தாலிபன் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் அங்கே பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த டேனிஷ் சித்திக் தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டார். தலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக்கின் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மக்களின் வேதனைகளை புகைப்படங்கள் வாயிலாக உலகறியச் செய்த புகைப்பட கலைஞர் என பலரும் இரங்கல் செய்தியினை தெரிவித்துவருகின்றனர்.
இப்படி ஒவ்வொருவரும் ராயட்ஸ் நிறுவனத்தின் மூத்த புகைப்பட பத்திரிக்கையாளர் தலிபான்கள் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக தான் உயிரிழந்து விட்டார் என பரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில்தான் தாலிபான்கள் இதனை மறுத்துள்ளனர். இதுக்குறித்து தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் CNN news 18-இடம் தெரிவித்தப்பொழுது, டேனிஷ் சித்திக் மரணத்திற்கு நாங்கள் வருந்துகிறோம் எனவும், இவருடைய மரணத்திற்கு நாங்கள் காரணம் இல்லை என கூறியுள்ளார். மேலும் பத்திரிக்கையாளர் யாருடைய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார் என்பது எங்களுக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார். இதோடு எந்தவொரு பத்திரிக்கையாளரும் யுத்தக் களத்தில் செய்திகளை பதிவு செய்ய வருகிறார்கள் என்றால் அதனை எங்களுக்கு தெரிவிக்கவேண்டும். அப்படி முன்கூட்டியே தெரிவித்திருந்தால் நாங்கள் சரியான முறையில் கவனித்து இருப்போம். ஆனால் இந்தியப் பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக் போர்க்களத்தில் எங்களுக்கு தெரியாமல் நுழைந்ததை எண்ணி வருந்துகிறோம் என தாலிபன் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இவரது மரணம் குறித்து இந்தியாவிற்கான ஆப்கான் தூதர் பரீத் மமூன்த்ஷே தனது டிவிட்டர் பக்கத்தில், கந்தகாரில் நேற்று இரவு நண்பர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார் என்ற சோகமான செய்தியை தெரிவிக்கிறேன். அவர் 2 வாரங்களுக்கு முன்பு காபூல் வந்தபோது அவரை சந்தித்தேன். அவரது குடும்பத்தினருக்கும், ராய்டர்ஸ் நிறுவனத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்புகூட ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் மேற்கொண்ட மீட்பு ஆபரேஷனுக்கு அவர்களுடன் சேர்ந்து சென்றார். அப்போது, அவருக்கு முன்னால் சென்ற ராணுவ வாகனத்தை தாலிபன்கள் தாக்கியதில் டேனிஷ் சித்திக் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும், ஆர்.பி.ஜி. ரக குண்டுகளால் நடத்தப்பட்ட அந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்தும், இதனால் அந்த நாட்டு மக்கள் தினம், தினம் எதிர்கொள்ளும் சிரமங்களையும் செய்திகளாக வெளியிட்டு இருந்தார் என டிவிட்டரில் கருத்தினைத் தெரிவித்திருந்தார். இதோடு ராயட்ஸ் நிறுவனமும் தனது இரங்கல் செய்தியினை வெளியிட்டுள்ளதோடு, டேனிஷ் சித்திக் குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது ஆப்கானிஸ்தானில் தாலிபன்களால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் டேனிஷின் உடல் ஜூலை 19 அன்று மாலை 5 மணியளவில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் (ஐ.சி.ஆர்.சி) ஒப்படைக்கப்பட்டது. இவரது உடலை இந்தியா கொண்டுவருவதற்கு அதிகாரிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், தனது மகன் டேனிஷ் சித்திக்கின் வேலை குறித்து பேசிய ”முஹம்மது அக்தர் சித்திக், தினமும் என்னுடன் அவர் தொலைபேசியில் பேசுவார். அவர் பாதுகாப்பில்லாமல் உணரவில்லை. அவரது வேலையை குறித்து மிகவும் தன்னம்பிக்கையுடன் இருந்தார்” என்று கூறியிருக்கிறார்.