Minister Senthil Balaji: அமலாக்கத்துறை மனு மீது இடைக்கால உத்தரவை பிறப்பிக்க மறுத்த உச்சநீதிமன்றம்.. பின்னணி என்ன?
அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்குமாறு அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்துரார் அரசு மருத்துவமனையிலிருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், எம்.எம். சுந்தரேஷ் அடங்கிய கோடைக்கால சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சந்தேகிக்க முடியுமா? என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
அமலாக்கத்துறை தரப்பு வாதம்:
அதையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்த பின் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது எப்படி சாத்தியமாகும்? என்றும் ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க கூடாது என்றும் வாதிட்டார். மேலும் இந்த மனுவில் உயர்நீதிமன்றம் முறையாக நடந்துகொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவால் செந்தில் பாலாஜியிடம் எங்களால் விசாரணை மேற்கொள்ள முடியவில்லை, செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்படும் சிகிச்சையே சந்தேகமாக உள்ளது. விசாரணையில் இருந்து தப்பிக்கவே இப்படி நடக்கிறதா? என்ற எண்ணம் தோன்றுகிறது. செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமது வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
செந்தில் பாலாஜி தரப்பு வாதம்:
இதற்கிடையே ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பு வழக்கறிஞர், இதயத்தில் இருக்கும் 4 அடைப்புகள் எப்படி போலியாக காட்ட முடியும்? என கேள்வி எழுப்பினார். மேலும் தவறான வாதங்களை அமலாக்கத்துறை முன்வைக்கிறது என்றும், மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் ஒருவர் மீது அமலாக்கத்துறை தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது என்றும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சந்தேகிக்க முடியாது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது அதிருப்தியை அளிக்கிறது. ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கிய பின்னரே இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் போது அதில் தலையிட விரும்பவில்லை என்றும் தற்போதைய நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் விசாரிப்பதே சரியாக இருக்கும் என கூறி வழக்கை ஜூலை 4 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துனர். அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை வைத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.