PSLV C58: கருந்துளைகளை ஆய்வு செய்யும் செயற்கைக்கோள்.. விண்ணில் சீறிப்பாய்ந்த பி.எஸ்.எல்வி சி58 ராக்கெட்..
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இன்று காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி58 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி சி 58 என்ற ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இது இன்று காலை 9.10 மணிக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது . பூமியில் இருந்து சுமார் 650 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
இதற்கான கவுண்டவுன் நேற்று காலை 8.10 மணிக்கு தொடங்கியது. 25 மணி நேர கவுண்டவுன் முடிந்த பின் இன்று காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோள், எக்ஸ்ரே மூலங்களின் தற்காலிக நிலை, நிறமாலை போன்ற அறிவியல் ஆய்வுகளையும், விண்வெளியில் உள்ள தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான ' நெபுலா’ ஆகியவற்றை பற்றி விரிவாக ஆராய ஏதுவாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விண்ணில் ஏவப்பட்டதில் இருந்து சுமார் 22 நிமிடம் பயணம் மேற்கொள்ள உள்ளது. பிஎஸ்எல்வி சி58 ராக்கெட்டில் எக்ஸ்போசாட் (XpoSat) செயற்கைக்கோள் மட்டுமின்றி பிற நாடுகளை சேர்ந்த செயற்கைக்கோள்களையும் சுமந்து செல்கிறது. முக்கியமாக கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த லால்பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிட்டுயூட் ஆப் டெக்னாலஜி மாணவிகள் ‘வேசாட்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளனர். இது, விண்வெளி மற்றும் பூமியின் மேற்பரப்பில் உள்ள புறஊதா கதிர்கள் மற்றும் கேரளாவில் வெப்பநிலை மற்றும் காலநிலை மாற்ற நிகழ்வுகளில் அவற்றின் தாக்கத்தை ஆராயும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெண்கள் மேற்பார்வையில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் என்ற பெருமை இந்த வெசாட் செயற்கைக்கோளுக்கே சேரும். இத்துடன் 10 வெளிநாட்டுச் செயற்கைக்கோள்களும் இந்த பி.எஸ்.எல்.வி சி 58 ராக்கெட் சுமந்து செல்கிறது.
#WATCH | Thiruvananthapuram, Kerala: On ISRO's PSLV-C58/XPoSat Mission to be launched on January 1, former ISRO Chairman G Madhavan Nair says, "60th launch of the workhorse, the PSLV will take place on this day (January 1, 2024)... Most of the missions have been successfully… pic.twitter.com/UoLg0zYVzT
— ANI (@ANI) December 31, 2023
இது தொடர்பாக பேசிய முன்னாள் இஸ்ரோ தலைவர் ஜி மாதவன், “இந்த ராக்கெட் அமைப்பு உலகளாவிய சூழ்நிலையில் மிகவும் நம்பகமான மற்றும் குறைந்த செலவில் உருவாகியுள்ளது. இதன் வெற்றி விகிதம் 95% க்கும் அதிகமாக இருப்பதை அதன் சாதனைப் பதிவு காட்டுகிறது, மேலும் இது வெளியீட்டு அமைப்புகளைப் பொருத்தவரை உலகளாவிய தரத்தை விட சிறந்தது. விண்மீன் திரள்கள், கருந்துளைகள், இறக்கும் நட்சத்திரங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய அடிப்படை நிகழ்வுகளைப் பார்ப்பதற்கான ஒரு கண்காணிப்பு அமைப்பைக் கொண்டிருக்கும் இந்த ஏவுதல் ஒரு குறிப்பிடத்தக்க அறிவியல் பணியாகும்” என பேசியுள்ளார்.
ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 10,000 பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டு உள்ளது. பலரும் இதற்கான முன்பதிவு அனுமதி சீட்டை பெற்றுள்ளனர். இன்று புத்தாண்டு என்பதால் ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்துள்ளனர்.