Israel Hamas War: இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் இந்தியா.. ஆப்ரேஷன் அஜய் திட்டம் அறிவிப்பு..
இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆப்ரேஷன் அஜய் என்ற திட்டத்தை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினர் இடையே நடந்தி வரும் தாக்குதலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்க ஆப்ரேஷன் அஜய் என்ற திட்டத்தை இந்திய வெளியுறவுத் துறை அறிமுகம் செய்துள்ளது.
Launching #OperationAjay to facilitate the return from Israel of our citizens who wish to return.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) October 11, 2023
Special charter flights and other arrangements being put in place.
Fully committed to the safety and well-being of our nationals abroad.
கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதலை தொடங்கியது. பல ஆண்டு காலமாக இஸ்ரேல் பாலஸ்தீன் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இது இஸ்ரேல் தனி நாடாக உருவானதில் இருந்து இந்த பிரச்சனை இருந்து வருகிறது. இஸ்ரேலுடன் பலமுறை போரிட்ட பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் காஸாவை ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் தான் கடந்த சனிக்கிழமை போர் தொடங்கியது.
தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே கடும் போர் நிலவி வருகிறது. இதனால் இஸ்ரேல் எல்லை பகுதியில் சுமார் 3 லட்சம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இஸ்ரேலுக்கு உதவிடும் வகையில் அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் படை வீரர்களை அனுப்பியுள்ளது. கடுமையான போர் தொடர்ந்து வரும் நிலையில் உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளது. கண்ணில் பட்ட இடங்கள் எல்லாம் உடல்கள். இந்நிலையில் போர் நடந்துக்கொண்டிருப்பதால பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பலரும் அவர்களது குடும்பத்தினரை இழந்து வாடுகின்றனர்.
இஸ்ரேலில் 18,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இஸ்ரேலில் சுமார் 85,000 இந்திய வம்சாவளி யூதர்கள் உள்ளனர். இவர்களில், 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக மேகாலயா முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இஸ்ரேலில் சிக்கித்தவித்து வரும் இந்தியர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. இதற்காக நேற்றைய தினம் ஆப்ரேஷன் அஜய் என்ற திட்டத்தை இந்தியா அறிமுகம் செய்தது. இது தொடர்பான அறிவிப்பை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார். சிறப்பு தனி விமானம் மற்றும் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் மூலம் இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவை இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களால் தாக்கி வரும் நிலையில், முதல் கட்டமாக, வெளியுறவு அமைச்சகம் நேற்று 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை அமைத்தது. கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு விவரங்கள்: 1800118797 (கட்டணமில்லா), +91-11 23012113, +91-11-23014104, +91-11-23017905, +91996829 , மற்றும் situationroom@mea.gov.in. என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்திய தூதரகம் இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்கு https://indembassyisrael.gov.in/whats?id=dwjwb என்ற இணைப்பில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.