G20 summit attendees: ஜி20 உச்சி மாநாடு.. பங்கேற்கப்போகும் உலக தலைவர்கள்..! யார் உள்ளே? யார் வெளியே?
டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கப்போகும், சர்வதேச தலைவர்கள் யார் யார் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்த, சர்வதேச தலைவர்கள் யார் யார் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஜி20 உச்சிமாநாடு:
உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகள் இடம்பெற்றுள்ள, ஜி20 அமைப்பிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. அதன்படி, அந்த அமைப்பின் உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் மற்றும் 20 அழைப்பு நாடுகள் என மொத்தம் 40 முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் ஒட்டுமொத்த டெல்லியே விழாக்கோலம் பூண்டுள்ளது. அதேநேரம், டெல்லியில் மாநகரம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. டெல்லி மாவட்டம் முழுவதும் காவல்துறை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ள நிலையில், நாளை முதல் பொதுமக்களுக்கு பல்வேறு பயண கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
பங்கேற்கும் தலைவர்கள்:
இந்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் பங்கேற்கும், உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. அதேநேரம், பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பிரதமர் மோடியை தனித்தனியாக சந்தித்து இருநாடுகளின் உறவை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளனர்.
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
- கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
- இங்கிலாந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
- ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா
- ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ்
- தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல்
- ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்
- பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன்
- தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா
- துருக்கிய அதிபர் தையிப் எர்டோகன்
- அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ்
- நைஜீரியாவின் அதிபர் போலா டினுபு
- வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா
ஜி20 மாநாட்டை புறக்கணித்த தலைவர்கள்:
டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டை புறக்கணிக்கும் மற்றும் பங்கேற்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நாடுகளின் பட்டியல் கீழே வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் உச்சி மாநாட்டை புறக்கணித்து இருப்பது பேசுபொருளாகியுள்ளது.
- சீன அதிபர் ஜி ஜின்பிங்
- ரஷ்ய அதிபர் விளாடிமி புதின்
- பிரேசிலின் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (அதிகாரப்பூர்வ தகவல் இல்லை)
- சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (அதிகாரப்பூர்வ தகவல் இல்லை)
- இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ (அதிகாரப்பூர்வ தகவல் இல்லை)
- இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (அதிகாரப்பூர்வ தகவல் இல்லை)
- மெக்சிகன் ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் (அதிகாரப்பூர்வ தகவல் இல்லை)
பலத்த பாதுகாப்பு:
மாநாட்டில் பங்கேற்க வரும் தலைவர்கள் தங்க உள்ள நட்சத்திர விடுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விடுதிகள் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டன. அந்த விடுதிகளின் நுழைவு வாயில்கள் முன் உள்ள சாலைகளில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தின் முன்புற ரோடும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.