Train Accident: ஆந்திராவில் இரண்டு ரயில்கள் மோதி கொண்ட விபத்து- உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு..!
ஆந்திராவை அடுத்த விஜயநகரத்தில் இரண்டு ரயில்கள் மோதி கொண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் நேற்று விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், மற்றொரு ரயில் மீது மோதியதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
08532 விசாகப்பட்டினம்-பலாசா பாசஞ்சர், 08504 விசாகப்பட்டினம்-ராயகடா பாசஞ்சர் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதாக தென் கடற்கரை ரயில்வே மண்டல அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், சிக்கி தவிக்கும் பயணிகளை மீட்கவும், ரயிலை நகர்த்தவும் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒரு ரயில் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த ரயில் விபத்து சம்பவம் குறித்து பேசிய ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, “ உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், விசாகப்பட்டினம் மற்றும் அனகாபள்ளி ஆகிய மாவட்டங்களில் இருந்து முடிந்தவரை ஆம்புலன்ஸ்களை அனுப்பவும், அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனைத்து வகையான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.
தொடர்ந்து, சுகாதாரம், காவல் மற்றும் வருவாய் உள்ளிட்ட பிற அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து, விரைவான நிவாரண நடவடிக்கைகளை எடுக்கவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திர ரயில் மோதி விபத்து: பிரதமர் மோடி இரங்கல்
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
PM @narendramodi spoke to Railway Minister Shri @AshwiniVaishnaw and took stock of the situation in the wake of the unfortunate train derailment between Alamanda and Kantakapalle section.
— PMO India (@PMOIndia) October 29, 2023
Authorities are providing all possible assistance to those affected. The Prime Minister…
அலமண்டா மற்றும் கண்டகபள்ளே பிரிவுக்கு இடையே ரயில் தடம் புரண்டதில் உயிரிழந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமர் மோடி நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ரயில் மோதி விபத்துக்குள்ளானதற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
Deeply distressed by the train collision in Vizianagaram, Andhra Pradesh, coming just months after the tragic Balasore #TrainAccident in June 2023.
— M.K.Stalin (@mkstalin) October 29, 2023
My heart goes out to the families of the victims, and I wish a speedy recovery for the injured.
With a significant number of…
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கணிசமான எண்ணிக்கையிலான இந்தியர்கள் தங்கள் பயணத்திற்காக ரயில்வேயை நம்பியுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடப்பது கவலையளிக்கிறது. மத்திய அரசும், ரயில்வேயும் அவசரமாக மறுமதிப்பீடு செய்து, ரயில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி, பயணிகளின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.” என பதிவிட்டிருந்தார்.