மதிய உணவில் கலக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. குழந்தைகளுக்கு என்னாச்சு?
மதிய உணவினை செய்ய பயன்படுத்தப்படும் பாத்திரங்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதை ஆசிரியரும் மற்ற ஊழியர்களும் கண்டறிந்தனர். அப்போது சமையலறைக்குள் இருந்த பாத்திரத்தில் வெள்ளை நிற திரவம் இருப்பதைக் கண்டனர்.

அரசு பள்ளி ஒன்றில் மதிய உணவு செய்ய பயன்படுத்தப்படும் பாத்திரத்திலும் குடிநீரிலும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நல்வாய்ப்பாக, பள்ளி ஊழியர்களுக்கு இதுதொடர்பாக தெரிய வந்ததை தொடர்ந்து, பெரிய அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.
பாத்திரத்தில் இருந்த வெள்ளை நிற திரவம்:
தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் தர்மபுரி கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. சமையலறை பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதை சமையல்காரர் நேற்று கவனித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
மதிய உணவினை செய்ய பயன்படுத்தப்படும் பாத்திரங்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதை ஆசிரியரும் மற்ற ஊழியர்களும் கண்டறிந்தனர். அப்போது சமையலறைக்குள் இருந்த பாத்திரத்தில் வெள்ளை நிற திரவம் இருப்பதைக் கண்டனர்.
ஆசிரியர்களுக்கு எழுந்த சந்தேகம்:
குடிநீர் குழாயை திறந்தபோது, மீண்டும் ஒரு துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த அவர்கள் தண்ணீர் தொட்டியை சோதித்தபோது, இதேபோன்ற வெள்ளை நிற திரவம் இருப்பதைக் கண்டனர். பாத்திரங்கள் மற்றும் குடிநீரில் தெளிக்கப்பட்ட திரவம் பூச்சிக்கொல்லி மருந்தாக இருக்கலாம் என்று சந்தேகித்த கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் பிறருக்கு அரசு பள்ளி ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் புகார் அளித்துள்ளது. மேலும், பாரதிய நியாய சன்ஹிதா தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு பின், 30 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டிலிருந்து பூச்சிக்கொல்லி மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மாதிரிகள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
குடும்பப் பிரச்னைகள் காரணமாக சந்தேக நபர் மனநிலை சரியில்லாதவராக இருக்கலாம் என்றும், அவர் இந்தச் செயலைச் செய்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: Janani Engagement: 36 வயதில் பேச்சிலர் லைஃப்புக்கு எண்டு கார்டு போட்ட நடிகை ஜனனி! பிரமாண்டமாக நடந்த நிச்சயம்; காதலர் யார் தெரியுமா?

