Telangana Election: போடு..! ரூ.15 லட்சத்திற்கு இன்சூரன்ஸ், ரூ.400-க்கு சிலிண்டர் - தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர் தேர்தல் வாக்குறுதி
telangana assembly elections 2023: தெலங்கான மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ரூ.400-க்கு சிலிண்டர் வழங்கப்படும் என்பது போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
telangana assembly elections 2023: பாரத் ராஷ்டிர சமிதி தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமான கே.சந்திரசேகர் ராவ், ஐதராபாத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கையை அறிவித்து தனது பரப்புரையை தொடங்கினார்.
தெலங்கான சட்டமன்ற தேர்தல்:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக, அடுத்தடுத்து நடைபெற உள்ள 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக தென்மாநிலத்தில் இடம்பெற்றுள்ள தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் அதிக கவனம் ஈர்த்துள்ளது. நவம்பர் 30ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியான பிஆர்எஸ், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. வாக்காளர்களை கவரும் விதமாக காங்கிரஸ் ஏற்கனவே பல்வேறு நலத்திட்ங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பாரத் ராஷ்டிர சமிதி தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமான கே.சந்திரசேகர் ராவ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கேசிஆர் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள்:
- மாற்று திறனாளிகளுக்கான ஓய்வூதியம் தற்போது வழங்கப்படும் நான்காயிரம் ரூபாயிலிருந்து ஆறாயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்
- ஆரோக்கிய ஸ்ரீ' திட்டத்தின்கீழ், தகுதியுள்ள பயனாளிகளுக்கு தலா ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு அளிக்கப்பட்டு வருகிறது. இத்தொகை ரூ.15 லட்சமாக உயர்த்தப்படும்
- விவசாயிகளுக்கான முதலீட்டு பாதுகாப்பு திட்டத்தில், ஒரு ஏக்கருக்கு ஆண்டொன்றுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்தொகை 5 ஆண்டுகளில் படிப்படியாக ரூ.16 ஆயிரமாக உயர்த்தப்படும்.
- சமூக பாதுகாப்பு ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும் ரூ.2,016 மாதாந்திர தொகை, 5 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும். முதல் ஆண்டிலேயே ரூ.3,016 ஆக உயர்த்தப்படும்
- தங்கிப்படிக்கும் ஜூனியர் கல்லூரிகள், பட்டப்படிப்பு கல்லூரிகளாக தரம் உயர்த்தப்படும்
- தகுதியான பயனாளிகளுக்கு வெறும் 400 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்
- தெலுங்கானா அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அதிநவீன அரிசி வழங்கப்படும்
- தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும்
- க்ருஹ லக்ஷ்மி திட்டத்தின் கீழ் ஹைதராபாத்தில் 1 லட்சம் 2BHK வீடுகள் கட்டப்படும், என்பன உள்ளிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்புகளை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வெளியிட்டார்.
தீவிரம் காட்டும் கேசிஆர்:
தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் 119 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில், 115 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கடந்த ஆகஸ்ட் மாதமே கேசிஆர் அறிவித்துவிட்டார். தொடர்ந்து, அக்கட்சியினர் களப்பணிகளையும் தொடங்கிவிட்டனர். தனக்கு அதிர்ஷ்டமான தொகுதியாக கருதப்படும் ஹுஸ்னாபாத்தில் இருந்து தேர்தல் பரப்புரைய கேசிஆர் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார். அடுத்த 24 நாட்களில் 41 பொதுக் கூட்டங்களில் அவர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது நவம்பர் 9 வரை நடைபெறும்.
நல்ல நாள் பார்த்த கேசிஆர்:
தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை நேற்றைய நாளில் கேசிஆர் தொடங்கியதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று ஞாயிற்றுக்கிழமை ஒன்பது நாள் நவராத்திரி திருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. மற்றொன்று நேற்றைய தேதியான 15ஐக் கூட்டினால் 6 வருகிறது. இது கேசிஆர்-ன் ராசியான எண்ணாக கூறப்படுகிறது.