Teachers Day 2022: டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்த தினம்! ஆசிரியர் தினமாக ஏன் கொண்டாடுகிறார்கள்?
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 1962 முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்கிறார் ஔவையார். ஆசிரியர் என்பவர் இறைவனுக்கு சமமாக பார்க்கப்படுபவார்கள் அவர்களுக்கென்று கொண்டாடப்படும் தினம் தான், இன்று. செப்டம்பர் 5, ஆசிரியர்களுக்கு அவர்களது பணிக்கு, அவர்களது சேவைக்கு, பொறுமைக்கு, தியாக மனப்பான்மைக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த விழாவை கொண்டாடுகிறோம்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள்
இந்தியாவில் செப்டம்பர் 5 ஆம் தேதியும், உலகின் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வி தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ இந்த தினம் நினைவு கூறுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவஞானியுமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 1962 முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஏன் கொண்டாடவேண்டும்?
நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் கையில் உள்ளது அதனை வடிவமைக்கும் பணியை ஆசிரியர்கள் செய்கிறார்கள் என்று கூறுவார்கள். மாணவர்கள் நாளைய உலகின் மனிதர்களாக மாறி, அவரவர்களுக்கு பிடித்த விஷயத்தில் வேலை செய்து, உயர்ந்து நல்ல இடத்திற்கு வருவதில் பெற்றோருக்கு உள்ள அதே பொறுப்பும், உரிமையும் ஆசிரியர்கள் இடத்தில் உள்ளது, ஒன்றல்ல இரண்டல்ல, ஓராயிரம் பேரின் வாழ்க்கைகள் அவர்கள் கைகளில் ஒப்படைக்க படுகின்றன. கல்லாக, பாறையாக பள்ளிக்கு வரும் நம்மை, செதுக்கி சிலையாக வெளியில் அனுப்பும் பெரும் வேலையை அயர்வின்றி செய்பவர்களுக்கு மரியாதை செலுத்தும் தினமாக இது அனுசரிக்கப் படுகிறது.
ஆசிரியர் விருதுகள்
இந்தியாவில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பாராட்டத்தக்க ஆசிரியர்களுக்கு பொது நன்றியாக ஆசிரியர் தினம் அன்று, அதாவது செப்டம்பர் 5 ஆம் தேதி, தேசிய ஆசிரியர் விருதுகள் இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகின்றன. இது ஆசிரியர்களுக்கு ஊக்கமாகவும், நன்றாக செயல்படுவதற்கு புத்துணர்வாகவும் இருக்கிறது.
ஊதியத்திற்கான பணி அல்ல
மற்ற பணிகளைப்போல ஆசிரியர் பணி என்பது ஒருவரின் வாழ்வாதாரத்திற்காக செய்யும் பணி அல்ல. தனது வாழ்வையே ஆதாரமாக்கி பலரை உருவாக்கும் பணி. அந்தப் பணியில் வேண்டுமானால், வாழ்வை நகர்த்துவதற்கான ஊதியம் கிடைக்கும், ஆனால் அந்த ஊதியத்திற்காக அந்தப் பணி அல்ல என்பதுதான் ஒரு சிறந்த ஆசிரியர் நம்பும் தத்துவம். ஆசிரியர்களுக்கு அரசு நிறைய செலவு செய்கிறது என்று குற்றம் சாட்டுவதை நம்மால் பார்க்க முடியும். ஆனால் எல்லோருக்கும் அந்த சம்பளம் இல்லை, அதில் படிநிலைகள் உள்ளன, அவர்கள் செய்யும் பணிக்கு முன் அந்த ஊதியம் இன்னும் சிறிது என்பதை நாம் உணர வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்