(Source: ECI/ABP News/ABP Majha)
Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற முக்கிய அரசியல்,சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
தமிழ்நாட்டில் ஜூன் 14ம் தேதிக்குப் பிறகு, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இன்று, கூடுதல் தளர்வுகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 14ம் தேதி நடைபெறுகிறது. கொரோனோ பெருந்தொற்றின் காரணமாக அன்னறய தினம் நிர்வாகிகளும், தொண்டர்களும் தலைமைக் கழகத்திற்கு வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும், கூட்டத்திற்கு பிறகு இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்கு புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், கோவில்களை கண்காணிப்பதற்காக மாவட்ட அளவில் குழுக்களை அமைக்கவும் தமிழக அரசு அறிவிப்பை வெளியிடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 16,813 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 2,236 பேரும், அதைத் தொடர்ந்து சென்னையில் 1,223 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 358ஆக உள்ளது.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவதையொட்டி முதல்வர் மு.க ஸ்டாலின் திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த, மண்டல ஊரடங்கு அமலாக்கக் குழுக்களின் எண்ணிக்கையை 15-லிருந்து 45-ஆக உயர்த்தி சென்னை மாநகராட்சி செயல்படுத்தப்படவுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் அழைப்பை ஏற்று, ஜூன் 12 மற்றும் 13 அன்று நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டின் அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்கிறார். ஜி7-க்கு தற்போது தலைமையேற்றுள்ள இங்கிலாந்து அரசு இந்தியா, ஆஸ்திரேலியா, கொரிய குடியர்சு, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை விருந்தினர்களாக ஜி7 உச்சி மாநாட்டிற்கு அழைத்துள்ளது. ஜி7 கூட்டத்தில் நேரடியாக கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டார்.
AIADMK legislature party meeting: அதிமுக கொறடா யார்? 14ம் தேதி எம்எல்ஏ.,கள் கூட்டம்
உலகளாவிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் ஆறு வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளுக்கு இ-வின் என்ற மின்னணு தளத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பயன்படுத்துகிறது. தடுப்பூசியின் கையிருப்பு மற்றும் சேமிப்பு, வெப்பநிலை தொடர்பான இ-வின் தரவுகளை வெளியிடுவதற்கு சுகாதார அமைச்சகத்தின் முன்அனுமதி அவசியம் என மீண்டும் மத்திய அரசு உறுதிபடுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அன்றாட புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. நேற்று குணமடைந்தவர்களில் 53 சதவீதம் பேர் 8 மாவட்டங்களில் இருக்கின்றனர்.