பில்கிஸ் வழக்கு: குஜராத் அரசு செய்தது தவறு: 11 குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்
குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை, ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியது.
கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் பில்கிஸ் பானு. இவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அவரது குடும்ப உறுப்பினர்களை கொடூரமாக கொலை செய்த வழக்கில் 11 குற்றவாளிகளின் தண்டனையை குஜராத் அரசு ரத்து செய்தது. குஜராத் அரசின் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று அதாவது ஜனவரி 8ஆம் தேதி ரத்து செய்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமையைக் காப்பது மிகவும் முக்கியமானது என குறிப்பிட்டுள்ளது.
பில்கிஸ் பானு விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படுமா?
குஜராத் அரசின் முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜனவரி 24ஆம் தேதி, இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நீதிபதிகள் வேறு வழக்கை விசாரித்ததால், பில்கிஸ் பானு மனு மீதான விசாரணை நடத்தப்படவில்லை. இதையடுத்து, இந்த வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு அமர்வு அமைக்க வேண்டும் என பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் சோபா குப்தா உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரின் கோரிக்கையை ஏற்றது. அதன்படி, இந்த மனுக்களை கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகிய நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து வந்தது. கே.எம்.ஜோசப் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, நாகரத்னாவுடன் இணைந்து, உஜ்ஜல் புயான், வழக்கை விசாரித்து வருகிறார்.
கடைசியாக நடைபெற்ற விசாரணையின்போது, விதிகளுக்கு உட்பட்டு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தது தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு தரப்பு வாதம் நிறைவுபெற்றதை தொடர்ந்து, கடந்தாண்டு அக்டோபர் மாதம் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவு என்ன?
இந்த நிலையில், குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை, ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வரும் ஜனவரி 8ஆம் தேதி அதாவது இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் பில்கிஸ் பானுவின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷோபா குப்தா, "குற்றங்களின் கொடூரமான தன்மையின் காரணமாக குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது. வழக்கின் விசாரணை மகாராஷ்டிராவில் நடந்தது. எனவே, குற்றத்தை குறைக்கும் அதிகாரம் அங்குள்ள மாநில அரசுக்கே (மகாராஷ்டிரா) உள்ளது" என்றார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ஏ.எம். சிங்வி மற்றும் வழக்கறிஞர் விருந்தா குரோவர், "மும்பையில் உள்ள விசாரணை நீதிபதியும் வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வு அமைப்பும் (சிபிஐ) குற்றவாளிகளை விடுவிப்பதற்கு உடன்படவில்லை. இருப்பினும் முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது" என வாதிட்டனர்.
குற்றவாளிகளின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா, "கடந்த 2022ஆம் ஆண்டு, மே மாதம், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசு முடிவு செய்தது. குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான விதி, 1992இன் கீழ் குற்றவாளிகளின் கோரிக்கையை பரிசீலிக்க குஜராத் மாநிலத்துக்கு அனுமதி வழங்குகிறது" என்றார்.
இந்நிலையில், குஜராத் அரசின் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமையைக் காப்பது மிகவும் முக்கியமானது எனவும், குற்றவாளிகளின் தண்டனையைக் குறைப்பது குறித்து மராட்டிய அரசே முடிவு செய்ய வேண்டும். குற்றவாளிகள் இரண்டு வாரத்தில் சரணடைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.