"இதை ஏன் வெளியிட்டீங்க; அதிகாரம் இருக்கிறதா?" - பிகார் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
கடந்த 2ஆம் தேதி, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவரங்களை பிகார் அரசு வெளியிட்டது.
பிகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த நிதிஷ் குமார் தலைமையிலான அரசு முடிவெடுத்து, இரண்டு கட்டங்களாக அதற்கான பணிகளை மேற்கொண்டது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு அதிகாரமில்லை என கூறி, பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிகார் அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா?
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிகார் அரசுக்கு உரிமை உள்ளதாக தெரிவித்தது. இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கிடையே, கடந்த 2ஆம் தேதி, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவரங்களை பிகார் அரசு வெளியிட்டது. இந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிகார் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என். பட்டி ஆகியோர் கொண்ட அமர்வு, "இந்த விவகாரத்தில் சில விஷயங்களை பரிசீலிப்பது தேவைப்படுகிறது. இதற்கு எங்களுக்கு நேரம் எடுக்கும். ஆனால், இதை ஏன் வெளியிட்டீர்கள்?” என பிகார் அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞரை நோக்கி கேள்வி எழுப்பியது.
சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடை விதிக்க மறுப்பு:
பிகார் அரசின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், இதற்கு பதில் அளிக்கையில், "இந்த வழக்கில் நோட்டீஸ் பிறப்பிக்கலாமா? வேண்டாமா? என்பதை முதலில் நீதிமன்றம் முடிவு செய்யும் என்று நீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டது" என்றார்.
தொடர்ந்து பேசிய நீதிபதி எஸ்.வி.என். பட்டி, "எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கமாட்டோம். ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பதை ஆராய்வோம். இந்த நேரத்தில் நாங்கள் எதற்கும் தடை விதிக்க விருப்பமில்லை. அவர்கள் பதில் மனுவை தாக்கல் செய்யட்டும்.
மாநில அரசு அல்லது எந்த அரசும் முடிவெடுப்பதை எங்களால் தடுக்க முடியாது. அது தவறாகிவிடும். சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான தரவில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அது பரிசீலிக்கப்படும். இதில், மாநில அரசாங்கத்தின் அதிகாரம் தொடர்பான மற்ற பிரச்சினையை நாங்கள் ஆராயப் போகிறோம்" என்றார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபராஜிதா சிங், "இந்தத் தரவுகள் சட்டவிரோதமாகச் சேகரிக்கப்பட்டதால் அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. உயர்நீதிமன்றம் விரிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனால், அது சட்டத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் தவறானது. இந்த நீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட சட்டத்தின் கீழ் தரவு சேகரிக்கப்படவில்லை. கே.எஸ்.புட்டசாமி தீர்ப்பில் கூறப்பட்டுள்ளபடி, நிர்வாக உத்தரவுக்கு கூட ஒரு முறையான நோக்கம் இல்லை" என வாதிட்டார்.
இதற்கு பதில் அளித்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, "பல முறை ஆராயப்படும் என அரசு தரப்பு கூறுகிறது. ஆனால், பொதுவாக வெளிவரும் கேள்வி என்னவென்றால், முழுமையான தரவுகளை வெளியிட வேண்டுமா? வேண்டாமா? என்பதுதான்" என்றார்.