NDA Exam 2021 : 'மைண்ட்செட்தான் பிரச்சனை’ தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் பெண்களை அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்த இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி எழுத்துத் தேர்வில், பெண்களுக்கு வாய்ப்பு மறுக்கக் கூடாது என்று இந்திய உச்சநீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளது. இதுநாள் வரையில், திருமணமாகாத ஆண்கள் மட்டுமே இந்த எழுத்துத் தேர்வுக்கு தகுதியுடையவர்களாக இருந்தனர்.
மைண்ட்செட்தான் பிரச்சனை:
நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
முன்னதாக, இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்தி மத்திய அரசு, " இது நிர்வாக ரீதியிலான முடிவு என்பதால், நீதிமன்றங்களின் தலையீடு தேவையில்லை. தேசியப் பாதுகாப்பு அகாடமி தேர்வில் வாய்ப்பு மறுக்கப்படுவதால், ராணுவத்தில் பெண்கள் நியமனம் குறைவதாக கருதமுடியாது" என்று தெரிவித்தது.
இதற்கு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையத்தை அமைப்பதற்கான தீர்ப்பை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வழங்கிய பின்னரும் ஏன் இந்திய அரசின் அணுகுமுறையில் மாற்றம் வரவில்லை. நீதிமன்றங்கள் உத்தரவிட்டால் தான், அரசு நடவடிக்கை எடுக்குமா? நான் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த காலம் தொட்டே இந்த போக்கு காணப்படுகிறது என்று வேதனை அடைந்தார்.
இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகள் நிரந்தர ஆணையத்துக்கு மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளதாக இந்திய கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாட்டே கூறினார். இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், " இந்த பெருமை உங்களை சேராது. நீங்கள் கடைசி வரை எதிர்ப்பு மனநிலையில் தான் இருந்தீர்கள். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த காரணத்தினால் தான் பெண் அதிகாரிகளுக்கான நிரந்தர ஆணையம் சாத்தியமானது. இந்திய கடற்படை, இந்திய விமானப் படையில் உத்தரவுகள் நடைமுறைப் படுத்தி வருகின்றன. இந்திய ராணுவத்தில் இதுவரை ஆயுதப்படை, காலாட்படை, எந்திரவியல் படை, பீரங்கிப் படை ஆகியவற்றில் பெண்கள் நியமிக்கப்பட்டதில்லை. பெண்களுக்கான நிரந்தர ஆணையத்தை செயல்படுத்தவும் முன்வரவில்லை" என்று தெரிவித்தார்.
தேசியப் பாதுகாப்பு அகாடமி: தேசியப் பாதுகாப்பு அகாடமி இந்திய இராணுவத்தின் முப்படைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கும் நிறுவனமாகும். 1954-இல் துவக்கப்பட்ட இந்த இராணுவப் பயிற்சி அகாடமி, மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தில் உள்ள கடக்வாஸ்லாவில் செயல்படுகிறது.
தேசியப் பாதுகாப்பு அகாடமியின் தரைப்படைப் பிரிவில் தேறிய மாணவர்கள் டேராடூனில் உள்ள இந்திய இராணுவ அகாதமியில் ஓராண்டு பயிற்சிக்குப் பின்னர் அதிகாரி எனும் தகுதி வழங்கப்படும். அதே போன்று விமானப்படைப் பிரிவில் பயிற்சி முடித்த மாணவர்கள் ஐதராபாத்தில் உள்ள இந்திய வான்படை அகாடமியில் ஓராண்டு பயிற்சி நிறைவு செய்ய வேண்டும். கப்பல் படை பயிற்சி முடித்தவர்கள் கேரளா மாநிலத்தின் எழிமலை எனுமிடத்தில் அமைந்த இந்தியக் கடற்படை அகாடமியில் ஓராண்டு பயிற்சி பெற வேண்டும்.
செப்டம்பர் 5-ஆம் தேதி தேர்வு: முன்னதாக, தேசிய பாதுகாப்பு அகாடமியின் 148-வது பாடநெறிக்கான இராணுவம், கடற்படை மற்றும் விமான படையில் சேர்வதற்கும், 110-வது இந்திய கடற்படை அகாடமி பாடநெறிக்கான கடற்படை அகாடமியில் சேர்வதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் கடந்த கடந்த ஜூன 29-ஆம் தேதி வெளியிட்டது. வரும், செப்டம்பர் 5-ஆம் தேதி தேசியளவில் எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.