"இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு: இந்து மதத்தில் மதவெறி இல்லை" - உச்ச நீதிமன்றம் கருத்து..!
"இந்து என்பது ஒரு மதம் அல்ல, ஒரு வாழ்க்கை முறை. இந்து மதத்தில் மதவெறி இல்லை. ஒற்றுமையின்மையை உருவாக்கக்கூடிய கடந்த காலத்தை தோண்டி எடுக்க வேண்டாம்"
படையெடுப்பாளர்களின் பெயர்களை கொண்ட அனைத்து நகரங்கள், வரலாற்று தளங்களின் பெயரை மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை, பாஜகவை சேர்ந்த அஸ்வினி குமார் உபாத்யாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
வரலாற்று இடங்களின் பெயரை மாற்றக் கோரி மனு:
காட்டுமிராண்டித்தனமான வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் பெயர்களை கொண்ட பண்டைய வரலாற்று கலாசார மத தளங்களின் உண்மை பெயரை கண்டறிந்து மறுபெயரிட்டு கமிஷனை அமைக்க வேண்டும் என அவர் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த பொது நல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம். ஜோசப், பி.வி. நாகரத்னா ஆகியோர் கொண்ட அமர்வு, மனு தாக்கல் செய்யப்பட்டதற்கான நோக்கம் குறித்து கேள்வி எழுப்பினர். இது, நாட்டில் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து:
வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், "நாட்டின் வரலாறு அதன் தற்போதைய மற்றும் வருங்கால சந்ததியினரை அச்சமூட்ட கூடாது. இந்து என்பது ஒரு மதம் அல்ல, ஒரு வாழ்க்கை முறை. இந்து மதத்தில் மதவெறி இல்லை. ஒற்றுமையின்மையை உருவாக்கக்கூடிய கடந்த காலத்தை தோண்டி எடுக்க வேண்டாம். நாட்டை கொதிநிலையில் வைத்திருக்க முடியாது.
குறிப்பிட்ட சமூகத்தை பழி சொல்லி நாட்டை கொதிநிலையில் வைத்திருக்க விரும்புகிறீர்களா? நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன? என மனுதாரரை நோக்கி உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
பின்னர் பேசிய நீதிபதி கே.எம். ஜோசப், "ஒரு கட்டத்தில் நாம் என்ன செய்தோம் என்பதை நீங்கள் பின்னர் உணர்வீர்கள். இந்த நீதிமன்றம் அழிவை உருவாக்கும் கருவியாக மாறக்கூடாது. வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நகரங்கள் இன்று இல்லை. நமக்கு மத உரிமை உண்டு.
மெட்டாபிசிக்ஸ் அடிப்படையில் இந்து மதம் மிக சிறந்த மதம். உபநிடதங்கள், வேதங்கள், பகவத் கீதை போன்றவற்றால் இந்து மதத்தின் உயரத்திற்கு வேறு எந்த அமைப்பாலும் ஈடு செய்ய முடியாது. அதற்காக நாம் பெருமைப்பட வேண்டும். தயவு செய்து சிறுமைப்படுத்தாதீர்கள்.
இந்து மதம் அல்ல, வாழ்க்கை முறை:
நமது மகத்துவத்தை நாமே புரிந்து கொள்ள வேண்டும். நமது மகத்துவம் நம்மைப் பெருந்தன்மையுள்ளவர்களாக வழிநடத்த வேண்டும். நான் ஒரு கிறிஸ்துவர். ஆனால், எனக்கு இந்து மதத்தின் மீது அவ்வளவு பற்று உண்டு. அதைப் படிக்க முயற்சிக்கிறேன். இந்து தத்துவம் பற்றிய டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணனின் படைப்புகளைப் படித்து பாருங்கள்" என்றார்.
கடந்த 2014ஆம் ஆண்டு, பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே, பல பாரம்பரிய நினைவு சின்னங்கள், இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, இஸ்லாமிய பெயர் கொண்ட இடங்களின் பெயர் மாற்றப்பட்டு வருவதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
குடியரசு தலைவர் மாளிகையில் அமைந்துள்ள தோட்டத்திற்கு அமிர்த உத்யன் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெயர் மாற்றப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.