மகளாக உங்கள் கடமையை செய்யுங்கள்.. விவாகரத்து வழக்கில் பெண்ணுக்கு அட்வைஸ் தந்த உச்சநீதிமன்றம்
தன்னுடைய படிப்பு செலவை தந்தை ஏற்க வேண்டுமென்றால் மகளும் தன்னுடைய கடமையை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருமணங்கள சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்ற கூற்று உண்டு. ஆனால் ஒரு சில சமயங்களில் இந்த திருமணங்கள் முறியும் நிலையும் சில சமயங்களில் ஏற்படுகின்றன. அப்போது தம்பதிகள் இருவர் அல்லது ஒருவர் குடும்ப நீதிமன்றங்களை நாடி விவாகரத்து பெறுகின்றனர். அந்த வகையில் வழக்கு ஒன்று குடும்ப நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. அந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்து வழக்கில் குடும்ப நல நீதிமன்றம் கொடுத்திருந்த தீர்ப்பை பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்தத் தடையை எதிர்த்து ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்விற்கு சென்றது. இந்த வழக்கை விசாரணையின்போது, தம்பதிகள் இடையே சமாதானம் செய்ய ஈடுபட்ட முயற்சி தோல்வி அடைந்தது என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் கணவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மகளுக்கு தந்தை படிப்பு செலவு மற்றும் திருமண செலவை செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. ஆனால் தந்தை தன்னுடைய மகளை பார்க்க வேண்டும் என்று கேட்டால் அதற்கு அவர் ஒத்துகொள்ளவில்லை. தன்னுடைய தந்தை செலவுகளை மட்டும் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு அவரை சந்திக்க மாட்டேன் என்று அவருடைய மகள் கூறுவது நியாயமில்லை” எனக் கூறினார். இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், “தன்னுடைய தந்தையிடம் இருந்து படிப்பு மற்றும் திருமண செலவுகளை ஏற்க விரும்பும் மகள், மகளாக தன்னுடைய கடமையையும் செய்ய வேண்டும். இந்த வழக்கை மீண்டும் உச்சநீதிமன்றத்தின் மத்தியஸ்த்தத்திற்கு அனுப்புகிறோம்” எனத் தெரிவித்தனர்.
முன்னதாக இந்த வழக்கில் 20 வயது மகளுடைய அனைத்து படிப்பு செலவுகளையும் தந்தை ஏற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது அதே வழக்கில் மகளும் தன்னுடைய கடமையை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இந்த மத்தியஸ்த்தத்தின் போது தந்தை மற்றும் மகள் தனியாக சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கை மீண்டும் வரும் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி விசாரணைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: ராவத் இணையின் உடல்களை எரியூட்டிய தலைமகள்கள்.. மனதில் உங்களுக்காக பொங்கும் அன்பும், அணைப்பும், நன்றியும்..