Outside Food In theatres : திரையரங்குகளில் உணவு பொருட்களைக்கொண்டு வரலாமா? உச்சநீதிமன்றம் அதிரடி..
Theatre Facilities:தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் குடிநீர் வசதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல விதிமுறைகளுடன் உச்சநீதிமன்றம் பரபர்ப்பு தீர்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள திரையரங்குகளில் குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களை வெளியிலிருந்து படம் பார்ப்போர் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்டிருந்த வழக்கு விசாரணை முன்னதாக ஜம்மு காஷ்மீர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில், திரையரங்குகளில் வெளியில் இருந்து எடுத்து வரப்படும் உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதை எதிர்த்து, சினிமா திரையரங்க உரிமையாளர்களின் சார்பில் டெல்லி உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு வழக்கு, இன்று டெல்லி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணை:
திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கினை, தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நரசிம்ஹா ஆகியோரின் தலைமையிலான அமர்வு குழு விசாரித்தது. அதில், திரையரங்கு செல்பவர்களும் திரையரங்க உரிமையாளர்களும் கவனிக்கக்கூடிய வகையில் சில அம்சங்கள் கூறப்பட்டன. இந்த விசாரணையில், மூத்த வழக்கறிஞர் கே வி விஸ்வனாதன் திரையரங்க உரிமையாளர்களின் சார்பாக, வாதாடினார். திரையரங்குகள் அனைத்தும் தனியாருக்கு சொந்தமான இடம் என்பதால், அவர்களுக்கு வெளியில் இருந்து எடுத்து வரப்படும் உணவுகளுக்கு தடை விதிப்பதற்கான உரிமை இருப்பதாக கூறினார். மேலும், இது போன்ற கோட்பாடுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் காணப்படும் என்றும் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் நடந்த வழக்கு விசாரணையை மேற்கோள் காட்டி பேசிய அவர், “ஜம்மு காஷ்மீரின் சினிமா (1975) சட்டத்தில் திரையரங்கிற்கு வருவோர் வெளி உணவு பொருட்களை எடுத்து வரலாம் எனக்கூறப் படவில்லை என்றும் கூறினார்.
திரையரங்குகளுக்கு முழு உரிமை
இந்த தீர்ப்பில் முதன்மையாக, திரையரங்குகளில் கட்டணமில்லாத குடிநீர் வசதிகளை திரையரங்குகளில் செய்துதர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல, படம் பார்க்க வருவோர், வெளி உணவுகளை எடுத்து வருவதற்கு தடை விதிப்பது என்பது திரையரங்க உரிமையாளர்களுக்கு இருக்க்கூடிய அடிப்படையான உரிமை. அதனால், வெளி உணவுகளுக்கு தடை விதிக்க திரையரங்குகளுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது என்ற கருத்தும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, படம் பார்க்க வருவோர் திரையரங்கின் விதிமுறை மற்றும் நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், வர்த்தக ரீதியான முடிவுகளை எடுக்க திரையரங்க உரிமையாளர்களுக்கு உரிமை இருப்பதாகவும், உச்சநீதிமன்ற அமர்வுக்குழு கூறியுள்ளது. குழந்தைகளுடன் திரையரங்கிற்கு வரும் பெற்றோர் தங்களது குழந்தைகளுக்காக வெளியில் இருந்து உணவு கொண்டு வந்தால், அதனை திரையரங்க உரிமையாளர்கள் “எடுத்துவரக்கூடாது” என தடைவிதிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.