ரஷ்ய அதிபரிடம் சென்று போரை நிறுத்தச் சொல்லமுடியுமா? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சொன்னது என்ன?
உக்ரைன் நாட்டில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் சிக்கியுள்ள சூழலில், இன்று உச்ச நீதிமன்றம் அரசு வழக்கறிஞர் ஜெனரல் கேகே வேணுகோபாலிடம் மத்திய அரசிடம் பேசி மாணவர்களுக்கு உதவுமாறு அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டில் மருத்துவக் கல்வி பெறுவதற்காக சென்றுள்ள ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் தற்போது ரஷ்யப் படையெடுப்பை எதிர்கொண்டு வரும் சூழலில், இன்று உச்ச நீதிமன்றம் அரசு வழக்கறிஞர் ஜெனரல் கேகே வேணுகோபாலிடம் மத்திய அரசிடம் பேசி மாணவர்களுக்கு உதவுமாறு அறிவுறுத்தியுள்ளது.
`இந்த விவகாரத்தைப் பார்வையிட்டு, உங்களால் உதவ முடியுமா என்று பாருங்கள்’ என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, வேணுகோபாலிடம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மனுதாரர்களிடம் மனுவின் நகல் ஒன்றை வழக்கறிஞர் ஜெனரலிடம் ஒப்படைக்குமாறும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. `அங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருக்கின்றனர்.. அவர்கள் கேட்பவற்றை நாம் மறுக்க முடியாது.. உங்கள் தொடர்புகளைப் பயன்படுத்தி, ஏதேனும் செய்யுங்கள்’ என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, வழக்கறிஞர் ஜெனரலிடம் தெரிவித்துள்ளார்.
இன்று காலை இந்த விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்த மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.தர்ரிடம் வேணுகோபால், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் ரோமானியாவுக்குச் சென்றுவிட்டார்களா எனக் கேட்கப்பட்ட போது, அவர் அதனை மறுத்ததோடு, மாணவர்கள் உக்ரைனில் இருப்பதாகவும், உக்ரைன் பாதுகாப்புப் படையினர் அவர்களை எல்லையைத் தாண்ட அனுமதிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.தர் தாக்கல் செய்துள்ள மனுவில் மத்திய அரசு உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை முடிந்தளவுக்கு விரைவில் மீட்க வேண்டும் எனக் கோரியுள்ளார். `பெரும்பாலானோர் பெண்கள்.. கடும் குளிரில் தவித்து வருகிறார்கள்.. சுமார் 6 நாள்களாக தவிக்கிறார்கள்’ என்றும் அவர் கூறியுள்ளார்.
`ரஷ்ய அதிபர் புடினிடம் பேசி போரை நிறுத்த வேண்டுமா? உங்களுக்கு என்ன வேண்டும்? நாம் அனைவருக்கும் இரக்கம் இருக்கிறது.. ஆனால் நீதிமன்றம் என்ன செய்ய முடியும்?’ எனக் கேட்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தான் அரசு வழக்கறிஞர் ஜெனரலிடம் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசி, இதனை நீதிமன்ற விசாரணையில் பட்டியலிடுவதாகக் கூறியுள்ளார்.
பின்னர் வழக்கறிஞர் ஜெனரல் கேகே வேணுகோபால் நீதிமன்றத்திற்கு வந்த போது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களுக்கு உதவ வேண்டும் எனவும், அந்நாட்டு அரசிடம் பேசி, மாணவர்கள் உக்ரைன் எல்லையைக் கடந்து ரோமானிய செல்வதற்கு உதவ வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்த மனு, உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்குமாறு தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது மனு ஆகும். கடந்த பிப்ரவரி 25 அன்று, வழக்கறிஞர் விஷால் திவாரி உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசுக்கு உக்ரைனில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் பாதுகாப்புக்காக விரைவில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.