25,000 அடி உயரத்தில் ஜெட்டில் பறந்தாரா பிரதமர் மோடி? பொய் என அடித்து சொல்லும் சுப்பிரமணிய சுவாமி
கண்ணாடி ஜன்னல் இன்றி பிரதமர் மோடி விமானத்தில் பறப்பது போன்று வெளியான புகைப்படம் பொய் என சுப்பிரமணிய சுவாமி குற்றம் சுமத்தியுள்ளார்.
சமீபத்தில், பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு தயாரிக்கப்படும் போர் விமானங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் ஏறி பயணம் செய்தார்.
அதோடு, விமானப்படை வீரர்களுக்கான சீருடையை அணிந்துகொண்டு நடப்பது, தேஜாஸ் விமானத்தின் அருகில் நின்று கொண்டிருப்பது, அந்த விமானத்தில் அமர்ந்தவாறு வெற்றிச் சின்னம் காட்டுவது போன்று தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பிரதமர் மோடி வெளியிட்டார். பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் தேஜஸ் விமானத்தில் பிரதமர் பயணித்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேஜாஸ் விமானத்தில் பிரதமர் மோடி செல்லவில்லையா?
25,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தின் உள்ளே அமர்ந்திருக்கும் பிரதமர் மோடி, கையை அசைத்து டாடா காண்பிப்பது போன்ற புகைப்படங்கள் எல்லாம் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுப்பிரமணிய சுவாமி பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். கண்ணாடி ஜன்னல் இன்றி பிரதமர் மோடி விமானத்தில் பறப்பது போன்று வெளியான புகைப்படம் பொய் என சுப்பிரமணிய சுவாமி குற்றம் சுமத்தியுள்ளார்.
பரபரப்பை கிளப்பிய சுப்பிரமணிய சுவாமி:
இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "25,000 அடி உயரத்தில் கண்ணாடி ஜன்னல் இன்றி, ஏர்ஃபோர்ஸ் ஜெட் விமானத்தில் பறக்கும் மோடியின் படம் போலியானது என்று ஒரு விமானப்படை அதிகாரி இன்று என்னிடம் கூறினார். ஏனெனில், அந்த உயரத்தில் கண்ணாடி ஜன்னல் இன்றி மோடி பறந்திருந்தால் அவர் தூக்கி வீசப்பட்டிருப்பார். கீழே விழுந்திருப்பார். இதை பிரதமர் அலுவலகம் மறுக்குமா?" என குறிப்பிட்டுள்ளார்.
An Airforce officer today spoke to me to say that picture of Modi flying in a Airforce Jet without the glass cover 25,000 feet above and waving out, is fake because at that height Modi would have been sucked out by the atmosphere and fallen to the ground. Will PMO deny this?
— Subramanian Swamy (@Swamy39) November 27, 2023
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம், ராணுவத்திற்கு தேவையான தளவாடங்கள், இலகுரக ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்களை தயாரித்து வடிவமைத்து வருகிறது. இந்நிலையில், 12 Su-30MKI ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பான பணிகளை ஆய்வு செய்ய சென்றபோது தான், பிரதமர் மோடி தேஜஸ் விமானத்தில் பயணம் செய்தார்.
தேஜாஸ் அதிகபட்சமாக 4000 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது. இது ஒரு பைலட் ஒற்றை இன்ஜின் விமானமாகும். அதிகபட்சமாக 13,300 கிலோ எடை கொண்டது. இது Mach 1.8 இன் அதிகபட்ச வேகத்தில் செல்ல முடியும். இது 850 கிமீ பொது வரம்பையும், 500 கிமீ போர் வரம்பையும் கொண்டுள்ளது. தேஜாஸ் எளிமையான வடிவமைப்பு கொண்ட குறைந்த விலை விமானம். எனவே, ஆசியாவில் உள்ள செலவின உணர்வுள்ள நாடுகளுக்கு இது மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. இருப்பினும் பெரும்பாலும் உள்நாட்டு உபயோகித்திற்காக மட்டுமே தேஜஸ் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது மார்க் 1, மார்க் 1A மற்றும் பயிற்சியாளர் பதிப்பு என வேரியண்ட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. புதிய அதிவேக வேரியண்டான தேஜாஸ் மார்க் 2, 2026 ஆம் ஆண்டிற்குள் தொடர் தயாரிப்புக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.